மேற்கு வங்கத்தில் மீண்டும் என்கவுன்டர்! சிறுமி கொலை வழக்கில் கைதான 23 வயது இளைஞர் உயிரிழப்பு
மேற்கு வங்கத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 23 வயது இளைஞர், போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களில் இதேபோன்ற மற்றொரு சம்பவமும் நடந்துள்ளதால் இந்த விவகாரம் கவனம் பெற்றுள்ளது.
விசாரணையின்போது துப்பாக்கிச் சூடு
மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் கைகாடா பகுதியில், 17 வயது சிறுமி உயிரிழந்த வழக்கில் பிரகலாத் தாஸ் என்பவரை போலீசார் கைது செய்திருந்தனர். இசை நிகழ்ச்சிக்குச் சென்ற சிறுமி வீடு திரும்பாத நிலையில், மறுநாள் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி இளைஞரை கைது செய்தனர்.
சம்பவம் நடந்த இடத்துக்கு அழைத்துச் சென்று குற்ற நிகழ்வை மீண்டும் விவரிக்கச் செய்துவிட்டு திரும்பியபோது, போலீஸ் அதிகாரியின் துப்பாக்கியைப் பறித்து அவர் சுட்டதாகவும், இதையடுத்து போலீசார் நடத்திய பதில் துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
மூன்று மாதங்களில் இரண்டாவது சம்பவம்
கடந்த ஜூலை மாதம், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் பரூய்பூரில் 11 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பிரவாஸ் மொண்டல் என்பவரும் இதேபோன்ற சம்பவத்தில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.
தற்போதைய சம்பவத்தில் துப்பாக்கி பறிக்கப்பட்டது மற்றும் துப்பாக்கிச் சூடு நடந்த சூழல் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டிய அம்சங்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.