முதன் முறையாக மேற்கு வங்கத்தில் ஆட்சியை கைப்பற்றிய பாஜக... 15 ஆண்டுகளுக்கு பிறகு மம்தாவுக்கு பின்னடைவு!
மேற்கு வங்காள மாநில சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டு வருகின்றன. மொத்தம் 2 கட்டங்களாக நடைபெற்ற இந்தத் தேர்தலில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கு எதிராகக் கருத்துக்கணிப்புகள் வெளியாகியிருந்த நிலையில், தற்போதைய தேர்தல் முடிவுகளும் அதற்கேற்பவே அமைந்துள்ளன. காலை 8 மணிக்குத் தபால் வாக்குகள் எண்ணப்பட்டதைத் தொடர்ந்து, 8:30 மணி முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி விறுவிறுப்பாகத் தொடங்கியது.
தேர்தல் களத்தில் ஆரம்பம் முதலே பாரதிய ஜனதா கட்சி கூட்டணி வேட்பாளர்கள் பெரும்பாலான தொகுதிகளில் தங்களது வலுவான முன்னிலையைப் பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக, பவானிபூர் தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் மம்தா பானர்ஜி தொடக்கத்திலேயே பின்னடைவைச் சந்தித்தது அரசியல் வட்டாரங்களில் மாபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் சுவெந்து அதிகாரி பவானிபூர் மற்றும் நந்திகிராம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் தற்போது வரை முன்னிலையில் நீடிக்கிறார்.
காலை 11 மணி நிலவரப்படி, மேற்கு வங்காளத்தில் ஆட்சியமைக்கத் தேவையான 148 இடங்களைத் தாண்டி, பா.ஜ.க. கூட்டணி சுமார் 186 தொகுதிகளில் முன்னிலை பெற்று அமோக வெற்றியை நோக்கிச் செல்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் வெறும் 105 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ள நிலையில், இடதுசாரி கட்சிகள் ஒரு தொகுதியில் மட்டுமே முன்னிலை பெற்று வரலாறு காணாத பின்னடைவைச் சந்தித்துள்ளன. கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த மம்தா பானர்ஜிக்கு எதிராக மக்களின் தீர்ப்பு இருப்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் மிகத் தெளிவாகக் காட்டுகின்றன.