மேற்கு வங்கத்தில் ஜூன் 1 முதல் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்! 

 

பெண்களின் சமூக மற்றும் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கிலும், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை எளிதாக்கும் வகையிலும் மேற்கு வங்க அரசு தற்பொழுது ஒரு புதிய அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மூலம் இயக்கப்படும் பேருந்துகளிலும் பெண்கள் அனைவரும் வரும் ஜூன் 1, 2026 முதல் எவ்விதக் கட்டணமுமின்றி முற்றிலும் இலவசமாகப் பயணிக்கலாம் என மாநிலப் போக்குவரத்துத் துறை அதிகாரப்பூர்வ அரசாணையை   வெளியிட்டுள்ளது.

இப்புதிய திட்டத்தின் கீழ், மாநிலத்தில் உள்ள குறுகிய தூரப் பேருந்துகள் மற்றும் நீண்ட தூரப் பேருந்துகள் என அனைத்து விதமான அரசுப் பேருந்துகளிலும் பெண்கள் இந்த இலவசச் சலுகையைப் பெறத் தகுதியுடையவர்கள் ஆவர். இத்திட்டத்தை முறைப்படுத்த, பயனாளியின் புகைப்படம், முகவரி மற்றும் பிரத்யேக க்யூஆர் கோடு அடங்கிய அதிநவீன 'டிஜிட்டல் ஸ்மார்ட் கார்டு' தகுதியுள்ள அனைத்துப் பெண்களுக்கும் வழங்கப்பட உள்ளது. சாமானியப் பெண்கள் தங்களின் பகுதிக்கு உட்பட்ட பிடிஓ  அல்லது எஸ்டிஓ  அலுவலகங்கள் வாயிலாக ஆதார், வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களைச் சமர்ப்பித்து இந்த ஸ்மார்ட் கார்டைப் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், இந்த ஸ்மார்ட் கார்டுகள் அச்சிட்டு வழங்கப்படும் இடைப்பட்ட காலம் வரை, பெண்கள் தங்களின் பயணத்தின் போது ஏதேனும் ஒரு அரசு அங்கீகாரம் பெற்ற புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையைக் காண்பித்து இலவசமாகப் பயணிக்கலாம் எனவும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது