"நாங்க ராணுவத்தையே பாத்துட்டோம்... காங்கிரஸால் தனியாக ஒரு கவுன்சிலரா கூட ஆக முடியாது” - அன்புமணி ஆவேசம்!

 

மகாபலிபுரத்தில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் மற்றும் காங்கிரஸ் கட்சியை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.

"காங்கிரஸ் கட்சியின் தலைவராக வந்திருக்கும் மாணிக்கம் தாகூர் சட்டை எல்லாம் மடித்து விட்டுக் கொண்டு பேசுகிறார். யோவ் நாங்கள் ராணுவத்தையே பார்த்து விட்டோம், துப்பாக்கியைப் பார்த்து விட்டோம், தடியடியைப் பார்த்து விட்டோம்" என அன்புமணி எச்சரித்தார்.

காவிரி நதிநீர் விவகாரத்தில் பாஜகவும் காங்கிரஸும் இணைந்து சூழ்ச்சி செய்து, தமிழகத்திற்கு வர வேண்டிய காவிரி நீரைத் தடுக்க முயல்வதாக அவர் குற்றம்சாட்டினார். மேகதாது விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸும் தமிழக காங்கிரஸும் இரட்டை வேடம் போடுகின்றன. கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் குழந்தையைக் கிள்ளிவிடுவார், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தொட்டிலை ஆட்டிவிடுவார் எனச் சாடினார்.

தமிழகத்திற்கு வரவுள்ள ராகுல் காந்தி, காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாகப் பேசுவாரா? என்றும் கேள்வி எழுப்பிய அன்புமணி, "காங்கிரசால் தனியாக நின்று ஒரு கவுன்சிலர் கூட ஆக முடியாது" என்றும் விமர்சித்தார்.

"என் மீது நம்பிக்கை வைத்து என்னை மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நன்றி. அய்யாவின் வழியில் அவரது லட்சியங்களை நிறைவேற்றுவோம்" என்று குறிப்பிட்டார். அய்யா வாழ்கின்ற காலத்திலேயே பாட்டாளி மக்கள் கட்சி தமிழகத்தை ஆள வேண்டும் என்பதே முதன்மையான இலக்கு என்றும் அவர் தமது உரையில் வலியுறுத்தினார்.