ஆவணி அமாவாசை - என்ன செய்யலாம்? என்ன எல்லாம் செய்யக் கூடாது?!
அமாவாசை தினத்தில் வாசலில் கோலமிடுவதை தவிர்க்க வேண்டும். முன்னோர்களுக்கு திதி கொடுத்த பின் கோலமிடலாம். முன்னோர்களின் புகைப்படங்களுக்கு துளசி சாற்ற வேண்டும்.
நமது முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொடுத்து நமக்கு நல்லருள் புரிய வேண்டி வழிபாடு செய்வதே தர்ப்பணம். தர்ப்பணம் செய்த பின் வீட்டில் இலையில் முன்னோர்களுக்கு படையல் போட்டு விட்டு, சாப்பிடலாம். அத்துடன் பசுமாட்டுக்கு கீரை அல்லது அரிசி கலந்த உணவு அளிப்பது கூடுதல் சிறப்பான பலன்களை தரும்.
அமாவாசை திதி நேரத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம். முன்னோர்களை துதிப்போம். அவர்களின் ஆசி பெற்று இன்புற்று வாழ்வோம். சாப்பிடுவதற்கு முன்னர் மூதாதையருக்கு பிடித்த உணவுகளை சமைத்து படைக்க வேண்டும். முன்னோர்களுக்கு உணவைப் படைக்கும் முன்பு, யாரும் சாப்பிடக் கூடாது. நாள் முழுவதும் விரதம் இருக்கலாம். அல்லது உணவு படைக்கும் வரை சாப்பிடாமல் இருந்து, விளக்கேற்றி, கற்பூர ஆராதானை செய்து பின்னர் சாப்பிடலாம்.
காகம் என்பது முன்னோர்களின் அம்சமாகக் கருதப்படுகிறது. எனவே, வீட்டில் இருப்பவர்கள் சாப்பிடும் முன்பு, உணவை காகத்துக்கு படைக்க வேண்டும். சாதம், காய்கறி, குழம்பு ஆகியவற்றில் நெய் சேர்த்து காகத்துக்கு படைப்பது சிறப்பு. காகங்கள் அமாவாசை அன்று வைத்த உணவை சாப்பிட்டால், முன்னோர்கள் சாப்பிட வந்திருப்பதாக ஐதீகம்.
இதனால், தோஷங்கள் நீங்கி, வீட்டில் சுபிட்சம் உண்டாகும்.காகம் வரவில்லை என்றாலோ, அல்லது உணவை சாப்பிடவில்லை என்றாலோ, உங்கள் குடும்பத்தில் இறந்தவர்கள் ஏதோ குறையுடன் இருப்பதாக கருதப்படுகிறது.பித்ருக்களுக்கு திதி கொடுக்கும் போது, அவரவரால் இயன்ற அளவுக்கு, உணவு, ஆடை இவைகளை தானமாக வழங்கலாம். கால்நடைகளுக்கு உணவுகளை தானமாக வழங்கலாம். அன்னதானம் செய்வது மிகவும் சிறந்தது. அரிசி, தானியங்கள் தானம் செய்தால் மகாலட்சுமியின் ஆசி கிடைக்கும் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கை.