"40 நாளில் என்ன பண்ணி கிழிச்சீங்க?" - உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்!

 

சட்டமன்ற வளாகத்திற்கு வெளியே இன்று செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், புதியதாகப் பதவியேற்றுள்ள தவெக அரசையும், முதலமைச்சர் விஜயையும் மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துப் பேசியுள்ளார். தேர்தல் களத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அவகாசம் கேட்கும் அரசின் போக்கை அவர் சாடியுள்ளார். சட்டமன்ற மரபுகள் தற்போதைய ஆட்சியில் சீரழிக்கப்பட்டு வருவதாகக் கூறி அவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் ஆவேசமாகப் பேசிய உதயநிதி ஸ்டாலின், "தேர்தல் பிரச்சார மேடைகளில் பேசும்போது, நாங்கள் ஆட்சிக்கு வந்த அடுத்த நாளே எல்லாவற்றையும் மாற்றிவிடுவோம், அனைத்து வாக்குறுதிகளையும் உடனே நிறைவேற்றுவோம் என்று பெரிய அளவில் பேசினார்கள். ஆனால், இப்போது சட்டமன்றத்திற்குள் வந்து மக்கள் எங்களுக்குச் சற்று அவகாசம் தர வேண்டும் என்று மழுப்பலாகப் பேசுகிறார்கள். நான் கேட்கிறேன், ஆட்சிக்கு வந்து இந்த 40 நாளில் நீங்கள் என்ன பண்ணி கிழிச்சீங்க? எந்தவொரு மக்கள் நலத்திட்டமாவது முழுமையாகத் தொடங்கப்பட்டுள்ளதா?" என்று காரசாரமாகக் கேள்வி எழுப்பினார்.

மகளிருக்கான இலவசப் பேருந்து பயணம், ரூ. 2,500 உதவித்தொகை, 6 இலவச சிலிண்டர்கள் போன்ற கவர்ச்சிகரமான வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு, இப்போது நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி மக்களை ஏமாற்றி வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து தற்போதைய சட்டமன்ற செயல்பாடுகள் குறித்துப் பேசிய அவர், "தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையைத் திரைப்படப் படப்பிடிப்பு நடக்கும் இடமாக மாற்றி விட்டார்கள். இத்தனை ஆண்டுகாலச் சட்டமன்ற வரலாற்றில் நடக்காத கூத்துகள் எல்லாம் இப்போது அவைக்குள் அரங்கேறி வருகின்றன. ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அவைக்குள் விசில் அடிக்கிறார்கள். சபை மரபுகளைப் பற்றிக் கவலைப்படாமல் கூச்சல் போடுகிறார்கள்.

இப்படியே போனால் அவைக்குள் இனி 'ஐட்டம் டான்ஸ்' கூட ஆடுவார்கள் போலிருக்கிறது. அந்த அளவிற்கு ஒரு காமெடி டைமாக தற்போதைய சபாநாயகரும், முதலமைச்சரும் சேர்ந்து சபையை நடத்தி வருகிறார்கள்" என்று மிகக் கடுமையான தொனியில் விமர்சித்தார்.

அவையின் மாண்பைக் கெடுக்கும் வகையில் செயல்படும் தவெக அரசைக் கண்டித்துத் தாங்கள் தொடர்ந்து மக்கள் மன்றத்தில் போராடுவோம் என்றும், ஆதாரமற்ற ஊழல் புகார்களைக் கூறி திசைதிருப்பும் வேலைகளை முதலமைச்சர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் தனது பேட்டியில் வலியுறுத்தியுள்ளார்.