“ஜெம் வீரமணி வழக்கில் நடந்தது என்ன?” - புகாரளித்த ஹரிஹரன் வெளியிட்ட பகீர் தகவல்கள்!

 

பெண்கள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் நலனுக்காகச் செயல்பட்டு வரும் தனியார் தொண்டு நிறுவனத்தின் நிர்வாகியான ஹரிஹரன், ஜெம் வீரமணி வழக்கில் சிக்கிய பென்டிரைவ் மற்றும் அதுதொடர்பான திடுக்கிடும் உண்மைகளைப் பொதுமக்களிடம் வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த 2025-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6-ஆம் தேதி தங்களது நிறுவனத்திற்கு ஒரு பென்டிரைவ் கிடைத்தது. அதில் 12 வயது சிறுமியை வீரமணி பாலியல் வன்கொடுமை செய்யும் 20 நிமிட அதிர்ச்சிகரமான வீடியோ பதிவு இருந்ததாக ஹரிஹரன் தெரிவித்தார். மேலும், குற்றவாளி சாந்தி மற்றும் வீரமணி என்ற பெயர்க் குறிப்புகளும் அதில் இடம்பெற்றிருந்தன.

அந்தப் பென்டிரைவை உடனடியாகக் காவல் உதவி ஆணையரிடம் ஒப்படைத்து, அவரது அறிவுறுத்தலின்பேரிலேயே அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், புகார் கொடுத்த மறுநாளே எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். குற்றவாளி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தாலும், விசாரணை தொடர்ந்து தாமதமானது ஏன் என்ற கேள்விக்கு இப்போது தான் விடை கிடைத்துள்ளதாகக் கூறிய ஹரிஹரன், கோடிக்கணக்கில் பணம் பெறப்பட்டு வழக்கை மூடி மறைக்க முயன்றதால் தான் தாமதம் ஏற்பட்டதாகக் குற்றம்சாட்டினார்.

பாதிக்கப்பட்ட குழந்தைக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும், பணத் திமிரில் இதுபோன்ற கொடூரச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இந்தச் சட்டம் ஒரு கடுமையான பாடமாக இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். காவல் துறை நினைத்திருந்தால் ஒரே வாரத்தில் குற்றவாளிகளைக் கைது செய்திருக்க முடியும் என்றும், ஆனால் ஒரு வருடத்திற்குப் பிறகே குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் தனது ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ளார்.