10ம் தேதிக்குள் பதவியேற்காவிட்டால் என்னாகும்? தொண்டர்கள் ஷாக்!

 

தமிழக சட்டமன்றத்தின் பதவிக்காலம் நாளை (மே 10) முடிவடையும் நிலையில், அதற்குள் புதிய அரசு அமையாவிட்டால் தமிழகத்தில் அரசியல் சாசன நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. இத்தகைய அசாதாரண சூழலில் ஆளுநர் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்துப் பல விவாதங்கள் எழுந்துள்ளன.

நாளை மாலைக்குள் எந்தவொரு கட்சியும் அல்லது கூட்டணியும் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி அமைக்க முன்வராவிட்டால், இந்திய அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவு 356-ஐ (Article 356) அமல்படுத்த ஆளுநர் பரிந்துரைக்கலாம். ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டால், தமிழக அரசு கலைக்கப்பட்டு மாநிலம் டெல்லியின் (மத்திய அரசு) நேரடி கட்டுப்பாட்டுக்குச் செல்லும்.

மாநிலத்தின் நிர்வாகப் பொறுப்புகளைக் குடியரசுத் தலைவரின் பிரதிநிதியாக ஆளுநர் கவனிப்பார். அவருக்கு உதவியாக ஐஏஎஸ் அதிகாரிகளைக் கொண்ட ஆலோசனைக் குழு நியமிக்கப்படும். மாநில சட்டமன்றம் முடக்கப்படுவதால், தமிழகத்திற்கான சட்டங்கள் மற்றும் பட்ஜெட் ஆகியவை நாடாளுமன்றத்தில் (Parliament) விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும். ஜனாதிபதி ஆட்சியை ஒரு நேரத்தில் 6 மாதங்கள் வரை நீட்டிக்க முடியும்.

தேர்தல் நடத்த உகந்த சூழல் இல்லை எனத் தேர்தல் ஆணையம் கருதினால், நாடாளுமன்றத்தின் ஒப்புதலுடன் 6 மாதங்களுக்கு ஒருமுறை புதுப்பித்து, அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை தேர்தலின்றி ஜனாதிபதி ஆட்சியைத் தொடரச் செய்ய முடியும்.

தற்போதைய சூழலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கும் 'குதிரை பேரங்கள்' நடைபெற வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இத்தகைய ஜனநாயக விரோதச் செயல்களைத் தவிர்க்கவும், நிலையான நிர்வாகத்தை வழங்கவும் ஆளுநர் ஜனாதிபதி ஆட்சியை ஒரு தற்காலிகத் தீர்வாகத் தேர்வு செய்யக்கூடும் என அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். நாளை மாலைக்குள் விசிக மற்றும் இதர கட்சிகளின் ஆதரவுடன் தவெக பெரும்பான்மையை நிரூபித்தால் மட்டுமே ஜனாதிபதி ஆட்சி என்ற அபாயம் தவிர்க்கப்படும்.