undefined

"துபாயில் அஜித் என்ன செய்கிறார்?! - மேனேஜர் சுரேஷ் சந்திரா சொன்ன தகவல்!

 

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் வான்வழிப் போக்குவரத்து பாதிப்புக்கு இடையே, துபாயில் இருக்கும் நடிகர் அஜித்குமாரின் பாதுகாப்பு குறித்து அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்துள்ளார். 

கார் பந்தயப் பயிற்சிக்காகத் துபாய் சென்றுள்ள நடிகர் அஜித்குமார், அங்கு நிலவும் அசாதாரணமான சூழல் காரணமாகச் சென்னை திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவரது பாதுகாப்பு குறித்து ரசிகர்கள் கவலையடைந்த நிலையில், இது தொடர்பாக அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் - இஸ்ரேல் இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளின் வான் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய், அபுதாபி, மஸ்கட் உள்ளிட்ட நாடுகளுக்கு இயக்கப்பட வேண்டிய 28-க்கும் மேற்பட்ட விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. இன்றும் அதே நிலை நீடிக்கிறது. நடிகர் அஜித் இன்று சென்னை திரும்புவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், வான்வழிப் பாதையில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அவரது விமானப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா இது குறித்துக் கூறுகையில், "நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித்குமார் துபாயில் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறார். அவருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. திட்டமிட்டபடி இன்று சென்னை திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் இந்த இக்கட்டான சூழல் சீரடைந்த பிறகு, அவர் சென்னை திரும்புவார்."

சினிமா படப்பிடிப்புகளுக்கு இடையே தனது கார் பந்தய ஆர்வத்தைத் தொடர்ந்து வரும் அஜித், துபாயில் உள்ள புகழ்பெற்ற கார் பந்தயத் திடல்களில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். விரைவில் அவர் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பில் இணையவுள்ளார். தற்போது துபாய் மற்றும் பிற வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியா வரும் விமானங்கள் ஈரானைத் தவிர்த்து மாற்றுப் பாதையில் இயக்கப்பட வேண்டியுள்ளதால், விமானச் சேவைகள் சீரடைய இன்னும் சில நாட்கள் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.