ஆதார் கார்டு இருந்தால் இலவச சிலிண்டர் பெறலாம் - உஜ்வாலா யோஜனா திட்டத்தின் பின்னணி என்ன?!

 

மத்திய அரசின் "பிரதமர் உஜ்வாலா யோஜனா" திட்டத்தின் கீழ் ஆதார் கார்டு இருந்தால் மட்டும் போதும், இலவச சிலிண்டர் பெறலாம் என்ற தகவல் இணையத்தில் பரவி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் மற்றும் உண்மையான நடைமுறைகள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

பிரதமர் உஜ்வாலா யோஜனா திட்டம் கடந்த 2016-ஆம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்டது. கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்குப் பாதுகாப்பான முறையில் இலவச எல்.பி.ஜி கேஸ் இணைப்பை வழங்குவதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ் முதல் சிலிண்டர் மற்றும் அடுப்பு வாங்குவதற்கும் நிதியுதவி வழங்கப்படுகிறது.

ஆதார் கார்டு என்பது ஒரு நபரின் அடையாள ஆவணம் மட்டுமே. அது இருந்தால் மட்டுமே இலவச சிலிண்டர் கிடைத்துவிடாது. அதற்குப் பின்வரும் தகுதிகள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் கண்டிப்பாக 18 வயது நிரம்பிய பெண்ணாக இருக்க வேண்டும். ஒரே வீட்டில் ஏற்கனவே வேறு எந்த ஒரு எல்.பி.ஜி இணைப்பும் இருக்கக் கூடாது.

விண்ணப்பிக்கும் குடும்பம் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பமாக (SC/ST, அந்தியோதயா அண்ண யோஜனா, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அல்லது ஏழைப் பழங்குடியினக் குடும்பங்கள்) இருக்க வேண்டும்.

இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களுக்கு அருகிலுள்ள இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம்  அல்லது ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எல்.பி.ஜி விநியோக மையங்களை அணுகி விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் போது சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்: அடையாள மற்றும் முகவரி சான்று: விண்ணப்பதாரரின் ஆதார் கார்டு. குடும்ப சான்று: மாநில அரசால் வழங்கப்பட்ட ரேஷன் கார்டு.

நிதி விவரம்: மானியத் தொகை நேரடியாக வந்து சேர விண்ணப்பதாரரின் வங்கி கணக்கு புத்தகம். எனவே, ஆதார் கார்டு என்பது இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கத் தேவையான பல ஆவணங்களில் ஒன்றுதானே தவிர, அது மட்டுமே இருந்தால் இலவச சிலிண்டர் வழங்கப்பட மாட்டாது. தகுதியுள்ள ஏழைப் பெண்கள் மட்டுமே இந்த அரசாங்க நலத்திட்டத்தின் கீழ் பயன் பெற முடியும்.