“முதலமைச்சர் விஜயின் பிறப்பு என்ன?".. மாஜி அமைச்சர் உதயகுமார் சர்ச்சை பேச்சு!
மதுரையில் நடைபெற்ற அதிமுக கட்சி பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து எழுப்பிய கேள்விகள் தற்பொழுது அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சையையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் தொண்டர்கள் மத்தியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசுகையில், "அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தையும் அதன் கொள்கைகளையும் கேள்வி கேட்க வேண்டுமென்றால், ஒன்று அந்தக் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருக்க வேண்டும் அல்லது கட்சியின் பாரம்பரிய வாரிசாக இருக்க வேண்டும். ஆனால், தற்போதைய முதலமைச்சர் விஜய்யின் அப்பா யார்? அவரது அரசியல் பிறப்பு என்ன? என்று நான் கேட்கிறேன். இதை யாரும் அநாகரிகமான முறையில் எடுத்துக் கொள்ள வேண்டாம். நான் கேட்கும் அரசியல் ரீதியான பிறப்பு என்ற கேள்வியை அதன் சரியான அர்த்தத்தில் புரிந்து கொள்ள வேண்டும்."
தொடர்ந்து தவெக அரசின் அரசியல் செயல்பாடுகள் குறித்துப் பேசிய அவர், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் அரசியல் ஆளுமைகளுடன் தவெக-வை ஒப்பிட முடியாது என்றும், பாரம்பரியமிக்க அதிமுகவை விமர்சிக்க தவெக தலைவருக்கு எவ்வித தகுதியும் இல்லை என்றும் அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் 'புலி பட வரி ஏய்ப்பு' விமர்சனத்தைத் தொடர்ந்து, தற்பொழுது ஆர்.பி. உதயகுமாரும் முதலமைச்சர் விஜய்யை இலக்கு வைத்து இத்தகைய கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
மாநிலத்தின் முதலமைச்சராக இருக்கும் ஒருவரைப் பொதுவெளியில் 'அவரது பிறப்பு என்ன?' என்று கேட்கும் தொனியில் ஆர்.பி. உதயகுமார் பேசியிருப்பது அநாகரிகமானது என்று தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தவெக தரப்பில் இதற்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டு வருவதால், இரு கட்சிகளுக்கும் இடையேயான மோதல் போக்கு தற்பொழுது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.