அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுவதில் தமிழ்நாடு அரசுக்கு என்ன ஈகோ? - அன்புமணி ராமதாஸ்
காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டத் தயங்குவது ஏன் என்றும், அரசுக்கு என்ன ஈகோ என்றும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசின் தற்போதைய அணுகுமுறையைக் கடுமையாக விமர்சித்துப்பேசினார். காவிரி நதிநீர் விவகாரம் என்பது ஏதோ ஒரு குறிப்பிட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சனை அல்ல; அது ஒட்டுமொத்த தமிழக மக்களின் உயிர்நாடிப் பிரச்சனை.
கர்நாடக அணைகளில் போதிய தண்ணீர் இருந்தும், தமிழகத்திற்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கூட தரக்கூடாது என்ற மனநிலையில் அம்மாநில அரசு திட்டமிட்டுப் பதற்றத்தை உருவாக்குகிறது. எனவே தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்துவதை விட்டுவிட்டு உச்சநீதிமன்றத்தை அணுகிச் சட்டப்பூர்வமாக உரிமையைப் பெற வேண்டும்.
முதலமைச்சர் கர்நாடகா சென்று அம்மாநில முதலமைச்சரைச் சந்தித்துப் பேசுவதால் தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டுத் தண்ணீர்கூடக் கிடைக்கப் போவதில்லை. மாறாக, மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகள் தாரைவார்க்கப்படும் அபாயமே உள்ளது. காவிரி விவகாரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைத்து உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி தமிழக அரசு தனது நிலையை உறுதியாகப் பதிவு செய்ய வேண்டும்.