சபை முடிந்தும் அமைச்சர் பேசியது என்ன மரபு? - உதயநிதி கேள்வி!
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று, அவையின் விதிகள் மற்றும் மரபுகள் மீறப்படுவதாகக் குற்றம் சாட்டி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். சபை ஒத்திவைக்கப்பட்டதாக அறிவித்த பிறகும் அமைச்சர் ஒருவர் தொடர்ந்து பேசியது எந்த வகையான நாடாளுமன்ற மரபு என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரம் இன்றைய சட்டப்பேரவை அமர்வில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
இன்றைய கூட்டத்தொடரில் அவையில் எழுந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், நேற்று (ஜூன் 22) அவையில் நடந்த ஒரு விசித்திரமான சம்பவத்தைச் சுட்டிக்காட்டினார். "நேற்று சட்டப்பேரவை ஆவணங்களின்படி நான் எனது உரையை ஆற்றி முடித்த உடனே, அன்றைய தினத்திற்கான அவை நடவடிக்கைகள் நிறைவடைந்துவிட்டதாகவும், சபை ஒத்திவைக்கப்படுவதாகவும் சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அதன் பின்னர் நாங்கள் அனைவரும் அவையிலிருந்து புறப்பட்டு வீட்டிற்குச் சென்றோம். ஆனால், வீட்டிற்குச் சென்று தொலைக்காட்சியைத் திறந்து பார்த்தபோது எங்களுக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. சபை ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பிறகும், அவையில் ஓர் அமைச்சர் இன்னமும் மைக் ஆன் செய்யப் பட்டு தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்" என்று குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், சபாநாயகர் அவையை ஒத்திவைப்பதாக அறிவித்த கணமே அவையின் நேரடி ஒளிபரப்பும், அதிகாரப்பூர்வப் பதிவுகளும் நிறுத்தப்பட வேண்டும் என்பதே விதிமுறை என்று சுட்டிக்காட்டினார். சபை முடிந்த பிறகும் அமைச்சர் பேசியது ஒளிபரப்பானது சபை மரபுகளைக் காற்றில் பறக்கவிடும் செயல் என்று சாடினார்.
எதிர்க்கட்சிகள் அவையில் இல்லாத நேரத்தில், தங்களுக்குச் சாதகமாக அமைச்சர் பேசிய விபரங்கள் அவை குறிப்பில் இடம் பெற்றுள்ளதா என்பதைச் சபாநாயகர் தெளிவுபடுத்த வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இத்தகைய விதிகளை மீறும் செயல்கள் நடக்கக் கூடாது என்றும் அவர் அவையில் வலியுறுத்தினார். உதயநிதி ஸ்டாலினின் இந்த நேரடிக் குற்றச்சாட்டிற்குப் பதிலளித்த சபாநாயகர், தொழில்நுட்பக் காரணங்களால் நேரலை தாமதமாகியிருக்கலாம் என்றும், விதிகளின்படியே அனைத்தும் நடக்கும் என்றும் விளக்கம் அளித்தார்.