"எதுக்கு இது?" முதல்வர் விஜய்யிடம் பெரம்பூர் மக்கள் கேள்வி - தீர்க்கப்படாத புகார்கள்!
சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் பொதுமக்களின் குறைகளைக் விரைவாகக் கேட்டறிந்து தீர்ப்பதற்காகக் கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்ட "மக்கள் குறைதீர் இணையதளம்", இதுவரை எந்தவித பலனையும் அளிக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
புகார்கள் பதிவு செய்யப்பட்டு நாட்கள் கடந்தும் எந்த முன்னேற்றமும் இல்லாததால், "எதற்காக இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டது?" என அப்பகுதி பொதுமக்கள் அதிருப்தியுடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பொதுமக்களின் குடிநீர் பிரச்சனை, சாலை வசதிகள், மின்சாரக் குறைகள் மற்றும் சாக்கடை நிலவரம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை நேரடியாக அரசிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் இந்த இணையதளம் தொடங்கப்பட்டது.
இணையதளம் தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே 700-க்கும் மேற்பட்ட புகார்கள் பொதுமக்களால் பதிவு செய்யப்பட்டன. இருப்பினும், அந்த இணையதளத்தில் உள்ள தரவுகளின்படி, பதிவு செய்யப்பட்ட 700-க்கும் மேற்பட்ட புகார்கள் மீது இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ நடவடிக்கையோ அல்லது நிலையோ மாற்றப்படாமல் அப்படியே இருப்பதாகக் கூறப்படுகிறது.
திட்டம் தொடங்கப்பட்ட போது காட்டப்பட்ட அதே வேகம், மக்களின் புகார்களுக்குத் தீர்வு காண்பதில் காட்டப்படவில்லை எனத் தொகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மக்களின் குறைகளைத் தீர்க்கப் போதிய அதிகாரிகளையோ அல்லது கண்காணிப்பு அமைப்பையோ ஏற்படுத்தாமல், விளம்பரத்திற்காக மட்டுமே இதுபோன்ற இணையதளங்களை அறிமுகப்படுத்துவது எந்த விதத்தில் பயன்படும் என அப்பகுதி மக்கள் கேள்விகளை முன்வைத்து வருகின்றனர்.