"ஸ்டாலின் சாருக்கு கொள்ளையடிப்பது தான் முக்கியம்...” - பெரம்பூரில் சீறிய விஜய்!
வேட்புமனுத் தாக்கலை முடித்த கையோடு, பெரம்பூர் தொகுதியில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் தனது முதல் தேர்தல் பிரசார உரையை நிகழ்த்தினார் விஜய். அவரது பேச்சில் இதுவரை இல்லாத அளவிற்கும் வேகமும், ஆளுங்கட்சி மீதான நேரடித் தாக்குதலும் தென்பட்டன.
தனது உரையைத் தொடங்கிய விஜய், "உழைப்பின் வாசம் வீசும் பெரம்பூரில் இருந்து எனது பிரசாரத்தைத் தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். வடசென்னையின் மிகப்பெரிய அடையாளம் பெரம்பூர். தாயின் ஆசியோடு இங்கிருந்து உங்கள் விஜய்யாகப் பேசுகிறேன்" எனத் தெரிவித்தார்.
"தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. ஒரு பாட்டி வயதில் இருப்பவர்களுக்குக் கூட இங்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. இரவு நேரங்களில் பெண்கள் வெளியே செல்லவே அச்சப்படுகிறார்கள். இது நாடா? இல்லை காடா?" எனக் கேள்வி எழுப்பினார். "டீ கடையில் கூட நிம்மதியாக அமர முடியவில்லை. போதையில் வருபவர்கள் யாரை வேண்டுமானாலும் வெட்டிவிட்டுச் செல்லும் நிலை உள்ளது. அடிப்படைப் பாதுகாப்புக் கொடுக்க முடியாத இந்த ஆட்சி எதற்கு? இந்த அதிகாரம் எதற்கு?" எனச் சாடினார்.
முதலமைச்சர் ஸ்டாலினை நேரடியாகக் குறிப்பிட்டுப் பேசிய விஜய், "ஸ்டாலின் சாருக்கு மக்கள் முக்கியமல்ல, தனது குடும்பத்துடன் இணைந்து கொள்ளையடிப்பதுதான் முக்கியம். டாஸ்மாக்கில் மட்டும் ரூ.1,000 கோடி ஊழல் நடந்துள்ளது. நகராட்சித் துறையிலும் அதே அளவு முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன. தகுதியுள்ள நமது இளைஞர்கள் வேலைக்காக அலைகிறார்கள். ஆனால், லஞ்சம் வாங்கிக்கொண்டு தகுதியில்லாதவர்களுக்கு வேலை வழங்கப்படுகிறது. இந்தத் 'தீய சக்தி' திமுக-விற்கு மக்கள் விரைவில் விடை கொடுப்பார்கள்" என்றார்.
"உங்களுக்காக எனது வசதியான வாழ்க்கை, சினிமா என அனைத்தையும் உதறித் தள்ளிவிட்டு வந்துள்ளேன். அனைத்து வலிகளையும் தாங்கிக் கொண்டு உங்களுக்காகவே நிற்கிறேன்" எனத் தனது அரசியல் வருகையின் நோக்கத்தை அவர் உருக்கமாகத் தெரிவித்தார். விஜய்யின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு, தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.