”உதய் அண்ணா பேசியது 200% தவறில்லை; இரட்டை அர்த்தத்தில் பேசவேயில்லை” - திவ்யா சத்யராஜ் ஆதரவு!

 

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதைக் கண்டித்து, திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் துணைச் செயலாளர் திவ்யா சத்யராஜ் அறிக்கை மற்றும் பேட்டி மூலம் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த திவ்யா சத்யராஜ், "உதய் அண்ணா பேசியதில் 200% எந்தத் தவறும் இல்லை. அவர் முழு மேடை நாகரிகத்தோடு தான் பேசியிருக்கிறார். ஒரு பெண்ணாக அவர் பேசியதில் எந்தத் தவறும் இல்லை என்பதில் நான் மிகவும் உறுதியாக நிற்கிறேன்" என்று கூறினார்.

"எந்தத் தவறும் செய்யாத ஒரு தலைவரைக் கைது செய்திருப்பது அநியாயமானது மற்றும் தவெக அரசின் அராஜகப் போக்கைக் காட்டுகிறது. அவர் இரட்டை அர்த்தத்தில் பேசவே இல்லை" எனக் குறிப்பிட்டார்.

முன்னதாகத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், "தஞ்சாவூரில் விவசாயிகளை ஒன்று திரட்டி திமுக நடத்திய மாபெரும் போராட்டத்தின் வெற்றியைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் தான் இந்தக் கைது நடவடிக்கை நடந்துள்ளது" எனச் சாடினார்.

"எதிர்க்கட்சித் தலைவரை இன்றே விடுவிக்க வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெளியே வீர வசனம் பேசிவிட்டு, 'அவரை நாங்கள் சிறையில் அடைக்க மாட்டோம்' என்று நீதிமன்றத்தில் பம்மிய சோஃபா மாடல் தவெக அரசுக்கு அந்த பயம் இருக்க வேண்டும்" எனக் காரசாரமாகக் குறிப்பிட்டுள்ளார்.