வாட்ஸ்அப்பில் உருக்கமான தகவல்... தனிமையில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை!
கோவை அருகே உள்ள நீலாம்பூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வந்தவர் 54 வயதுடைய மனோஜ் ஆவார். இவருக்கு மனைவியும் 2 மகன்களும் உள்ள நிலையில், இவர்கள் சூலூரை அடுத்த காங்கேயம்பாளையம் பகுதியில் சொந்த வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்பப் பிரச்சினை காரணமாக மனோஜின் மனைவி மற்றும் மகன்கள் தங்களின் சொந்த ஊரான கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்திற்குச் சென்றுவிட்டனர்.
வீட்டில் தனியாக வசித்து வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ், குடும்பத்தினர் பிரிந்து சென்றதால் கடுமையான மன உளைச்சலிலும் தனிமையிலும் வாடியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாகத் தனது செல்போன் மூலம் மகனிடம் பேசி வருத்தப்பட்ட போது, அவரது மகன் தந்தையைத் தேற்றி ஆறுதல்படுத்தியுள்ளார். அதன்பிறகும் மன அழுத்தத்தில் இருந்து மீள முடியாத மனோஜ், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரெனத் தூக்குப்போட்டு விபரீத முடிவு எடுத்துள்ளார்.
அவர் தற்கொலை செய்வதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பாகத் தனது செல்போன் வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் உறவினர்கள் அனைவருக்கும் உருக்கமான மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அனைவரும் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள், நான் போகிறேன் எனப் பதிவிட்டுவிட்டுத் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இந்த அதிர்ச்சித் தகவலைப் பார்த்த உறவினர்கள் உடனடியாக வீட்டிற்கு விரைந்து வந்து பார்த்தபோது அவர் உயிரிழந்து கிடந்ததால், சூலூர் போலீசார் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.