என்னாகுமோ? ஏதாகுமோ? எகிறும் எதிர்பார்ப்பு... 7,017 வேட்புமனுக்களில் யாருடையது தப்பும்? இன்று பரிசீலனை! 

 

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் (ஏப்ரல் 6) நிறைவடைந்த நிலையில், இன்று காலை முதல் வேட்புமனுக்கள் மீதானப் பரிசீலனை தீவிரமாகத் தொடங்கியுள்ளது.

மார்ச் 30-ம் தேதி தொடங்கிய வேட்புமனுத் தாக்கல், நேற்று மதியம் 3 மணியுடன் நிறைவடைந்தது. கடைசி நாளான நேற்று எடப்பாடி பழனிசாமி, பிரேமலதா விஜயகாந்த், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் தங்களது மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

தமிழகம் முழுவதும் மொத்தம் 7,017 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். ஆண்கள் - 5,719; பெண்கள் - 1,296; திருநங்கைகள் - 2 பேர். கரூர் தொகுதியில் தமிழகத்திலேயே அதிகபட்சமாக 108 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். மானாமதுரை தொகுதியில் மிகக்குறைவாக 6 பேர் மட்டுமே மனுதாக்கல் செய்துள்ளனர்.

சென்னையில் மொத்தம் 543 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். இதில் பெரம்பூரில் அதிகபட்சமாக 63 பேரும், வில்லிவாக்கத்தில் குறைந்தபட்சமாக 17 பேரும் களத்தில் உள்ளனர்.

இன்று ஏப்ரல் 7 காலை 10 மணி முதல் அந்தந்தத் தொகுதித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படுகின்றன.

வேட்புமனுவில் போதியத் தகவல்கள் இல்லாமை, சொத்து விவரங்களை மறைத்தல், உரியக் கையொப்பம் இல்லாமை அல்லது உறுதிமொழிப் பத்திரத்தில் குளறுபடி இருந்தால் அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும்.

வி.ஐ.பி தொகுதிகளில் போட்டியிடும் முக்கியத் தலைவர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படுமா அல்லது ஏதேனும் ஆட்சேபனை தெரிவிக்கப்படுமா என்பது இன்று மாலைக்குள் தெரியவரும். வேட்புமனுக்களைத் திரும்பப் பெற ஏப்ரல் 9-ம் தேதி கடைசி நாளாகும்.

ஏப்ரல் 9-ம் தேதி மாலை அந்தந்தத் தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கப்படும். வரும் ஏப்ரல் 23-ம் தேதி தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனைப் போட்டி நிலவும் நிலையில், இன்றையப் பரிசீலனைக்குப் பிறகு களத்தில் எத்தனை பேர் எஞ்சியிருப்பார்கள் என்பது உறுதியாகிவிடும்.