வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம்... பயனர்களிடம் பிறந்த தேதி விவரங்களைக் கேட்கும் மெட்டா!
இந்தியாவின் புதிய தரவுப் பாதுகாப்புச் சட்டங்களுக்கு இணங்குவதற்காக, வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது சில பயனர்களிடம் வயது தொடர்பான ஒப்புதலைக் கேட்கும் புதிய அம்சத்தைச் சோதனை செய்து வருகிறது. இந்தியாவில் விரைவில் அமலுக்கு வரவிருக்கும் மத்திய டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்தின்படி, 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் தரவுகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு அவர்களது பெற்றோரின் சரிபார்க்கப்பட்ட ஒப்புதலைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மெட்டா நிறுவனத்தின் சமூக வலைதளப் பிளாட்ஃபார்ம்களில் புதிய பாதுகாப்பு முறைகள் மற்றும் வயது சரிபார்ப்பு வழிமுறைகள் தீவிரமாக உருவாக்கப்பட்டு வருகின்றன.
இந்தச் சோதனை முயற்சியின் ஒரு பகுதியாக வாட்ஸ்அப் பயனர்கள் சிலருக்குத் தங்களது பிறந்த தேதியைப் பதிவு செய்யும்படி கோரும் அறிவிப்புகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. இருப்பினும் இந்த வயது சரிபார்ப்புச் சோதனையானது முழுமையாக விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே செயல்படுவதாகவும், பயனர்கள் கட்டாயமாகத் தங்களது வயதை உறுதிப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பயனர்கள் வழங்கும் வயது மற்றும் பிறந்த தேதி குறித்த தனிப்பட்ட தகவல்கள் எப்போதுமே பாதுகாப்பாக வைக்கப்படும் என்றும் மற்ற பயனர்களுக்கு அவை பகிரப்படாது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் வரவிருக்கும் டிஜிட்டல் சட்ட விதிமுறைகளைக் கருத்தில் கொண்டு வாட்ஸ்அப் நிறுவனம் தனது பாதுகாப்பு அம்சங்களை முன்கூட்டியே வலுப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாகக் தொழில்நுட்ப மற்றும் சட்டப்பூர்வ விவகாரங்கள் குறித்து மத்திய அரசு அதிகாரிகளுடன் நிறுவனத்தின் பிரதிநிதிகள் தொடர்ந்து ஆலோசனைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.