வாட்ஸ் அப் Username பயன்பாட்டுக்கு தடை.. மத்திய அரசுக்கு மெட்டா நிறுவனம் விளக்கம்!
பிரபல குறுஞ்செயலி நிறுவனமான வாட்ஸ்அப், தனது பயனர்களின் மொபைல் எண்களைப் பகிராமல் மற்றவர்களுடன் தொடர்புகொள்ள ஏதுவாக 'யூசர்நேம்' என்ற புதிய வசதியை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இந்த வசதியால் ஆன்லைன் மோசடிகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறி மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மெட்டா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
மத்திய அரசு அனுப்பியிருந்த நோட்டீஸில், டெலிகிராம் போன்ற பிற செயலிகளில் யூசர்நேம் வசதியைப் பயன்படுத்திப் போலி கணக்குகள் உருவாக்கப்படுவதும், அதன் மூலம் பகுதி நேர வேலை மற்றும் முதலீட்டு மோசடிகள் நடப்பதும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. வாட்ஸ்அப்பிலும் இந்த வசதி வந்தால், மோசடி செய்பவர்களைக் கண்டறிவது கடினமாகிவிடும் என்பதால், இது குறித்து 3 நாட்களுக்குள் விரிவான விளக்கம் அளிக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
மத்திய அரசின் இந்த நோட்டீஸிற்கு வாட்ஸ்அப் நிறுவனம் பதிலளித்துள்ளது. அதில், பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்யப் பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. புதிய யூசர்நேம்களை உருவாக்கும் போது, பிரபலமான நிறுவனங்கள், அரசு அமைப்புகள், அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களின் பெயர்களைப் போலியாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் அந்தப் பெயர்கள் முன்கூட்டியே முடக்கப்பட்டுப் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
ஒரு பயனர் புதிய நபரிடம் இருந்து யூசர்நேம் மூலம் செய்தியைப் பெறும்போது, அவரது கணக்கின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்கும் வசதி மற்றும் தேவைப்பட்டால் உடனடியாக 'பிளாக்' அல்லது 'ரிப்போர்ட்' செய்யும் பாதுகாப்புப் பொத்தான்கள் தெளிவாகக் கொடுக்கப்படும்.
இந்த வசதியின் முதன்மை நோக்கமே, பெண்கள் மற்றும் சாதாரணப் பயனர்கள் தங்களின் தனிப்பட்ட மொபைல் எண்களைப் பொதுவெளியில் பகிராமல், தங்களது தனியுரிமையைப் பாதுகாத்துக் கொள்வதற்காகத்தான் என்று மெட்டா நிறுவனம் வாதிட்டுள்ளது.
மத்திய அரசின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க, இந்த யூசர்நேம் வசதியில் கூடுதல் பாதுகாப்பு மாற்றங்களைச் செய்த பிறகே, இது இந்தியாவில் உள்ள அனைத்துப் பயனர்களின் பயன்பாட்டிற்கும் முழுமையாகக் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.