சுற்றுலா சென்றபோது விபரீதம்... கோதாவரி ஆற்றில் மூழ்கி 3 கல்லூரி மாணவர்கள் பலி!
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமுந்திரி நகரில் உள்ள ஜம்பேட்டா பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 4 பேர், நேற்று மாலை கோனசீமா மாவட்டம் தௌலேஸ்வரம் அணை அருகே உள்ள பிச்சுகலங்கா பகுதிக்குச் சுற்றுலா சென்றுள்ளனர். மாலை நேரத்தில் மாணவர்கள் 4 பேரும் ஆற்றில் இறங்கிக் குளித்துள்ளனர். அப்போது ஆற்றில் நீரோட்டம் மிக அதிகமாக இருந்ததால், எதிர்பாராத விதமாக நான்கு பேரும் அடித்துச் செல்லப்பட்டனர்.
ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மாணவர்களில் ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாகப் போராடி நீந்தி கரைக்கு வந்து உயிர் தப்பினார். மற்ற 3 மாணவர்களும் ஆழமான பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கினர்.
உயிர் தப்பிய மாணவர் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கோதப்பள்ள போலீஸார் மற்றும் மீட்புக் குழுவினர் தேடுதல் பணியைத் தொடங்கினர். நீண்ட நேரத் தேடுதலுக்குப் பிறகு ஒரு மாணவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மாயமான மற்ற இரண்டு மாணவர்களின் உடல்களைத் தேடும் பணியில் போலீசார் மற்றும் உள்ளூர் நீச்சல் வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோடை விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களைக் கழிக்கச் சுற்றுலாச் சென்ற இடத்தில், கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தது அவர்களது குடும்பத்தினரிடையேயும், ராஜமுந்திரி பகுதியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.