தமிழகத்தில் தேர்தல் எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்!
இன்று சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட 12 தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.
தமிழகத்தில் அமைதியான முறையில் தேர்தலை நடத்த ஏதுவாக, அனைத்துத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் தேர்தலை நடத்த வேண்டும் என்று பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஒருமித்த கோரிக்கையைத் தேர்தல் ஆணையத்திடம் முன்வைத்துள்ளன.
மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புகழ்பெற்ற உள்ளூர் திருவிழாக்கள் நடைபெறவுள்ளன. இதனைப் பாதிக்காத வகையில், திருவிழாக்கள் முடிந்த பின்னரே தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் எனப் பல கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இந்த ஆலோசனையில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மற்றும் தமிழ்நாடு பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு பாதுகாப்பு மற்றும் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து விளக்கமளித்தனர்.
ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், "அரசியல் கட்சிகளின் கோரிக்கைகள் அனைத்தும் விரிவாகக் கேட்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்கப்படும். தமிழகத்தின் கலாச்சார நிகழ்வுகள் மற்றும் உள்ளூர் திருவிழாக்களுக்கு மதிப்பளிக்கும் வகையில், அவற்றைத் தேர்தல் தேதிகளுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்த பின்னரே முறையான அறிவிப்பு வெளியாகும்" என்று தெரிவித்தார்.
மேலும், கோடைக்கால வெயிலின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு வாக்குச் சாவடிகளில் நிழற்குடை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.