"மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 எப்போது?" - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்!

 

தமிழகத்தில் தவெக தலைமையிலான புதிய கூட்டணி அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், அக்கட்சி தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த மிக முக்கியமான வாக்குறுதியான "மாதாந்திர மகளிர் உரிமைத்தொகை ரூபாய் 2,500" எப்போது வழங்கப்படும் என்பது குறித்து வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் விரிவான விளக்கமளித்துள்ளார்.

கடந்த கால ஆட்சியைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் தவெக அரசு பொறுப்பேற்ற சில நாட்களிலேயே மகளிர் உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும் என்ற கேள்விகள் பரவலாக எழத் தொடங்கியுள்ளன. இதுகுறித்துச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஆவேசப்படாமல் நிதானமாகப் பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், "கடந்த காலங்களில் திமுக அரசு பொறுப்பேற்ற உடனேயே தங்களின் அத்தனை திட்டங்களையும் உடனடியாகச் செயல்படுத்திவிடவில்லை. அவர்கள் ஆட்சியமைத்த பிறகு பல மாதங்கள் எடுத்துக்கொண்டு, நிதி நிலைகளை ஆராய்ந்த பின்னரே தங்களின் முக்கியத் திட்டங்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றத் தொடங்கினர்" என்பதைச் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து தவெக அரசின் திட்டங்கள் குறித்துப் பேசிய அவர், "தவெக அரசு தற்போது தான் புதிய அமைச்சரவையை அமைத்துத் தனது பணிகளைத் தொடங்கியுள்ளது. தேர்தல் வாக்குறுதியில் அளிக்கப்பட்டபடி தகுதியுள்ள மகளிருக்கு மாதாந்திர உரிமைத்தொகை ரூபாய் 2,500 வழங்குவது மற்றும் பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணம் ஆகிய இரண்டு முக்கியத் திட்டங்கள் குறித்தும் முதலமைச்சர் விஜய் அவர்கள் சரியான நேரத்தில் முறையான ஆய்வுகளை மேற்கொண்டு மிகச் சிறந்த, நல்ல முடிவை அறிவிப்பார்" என்று உறுதிபடத் தெரிவித்தார்.

புதிய அரசு பொறுப்பேற்றவுடன் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான நிதி ஆதாரங்கள் மற்றும் பயனாளிகள் பட்டியல் சரிபார்ப்பு போன்ற ஆரம்பகட்ட உள்கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால், இந்தத் திட்டங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என அமைச்சர் செங்கோட்டையன் தனது பேட்டியில் தெளிவுபடுத்தியுள்ளார்.