"அரிசி வாங்கவே மக்கள் தவிக்கும்போது விமான எரிபொருளுக்கு வரிச்சலுகையா?" - தவெக அரசுக்கு சீமான் கேள்வி!
அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் ஏழை, எளிய மக்கள் அன்றாட உணவிற்கே அல்லாடும் சூழலில், பணக்காரர்கள் பயணிக்கும் விமான எரிபொருளுக்கு வரிச்சலுகை அளித்துள்ள தமிழக அரசின் நடவடிக்கைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பலத்த கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சென்னை விமான நிலையத்தில் விமான எரிபொருள் மீதான விற்பனை வரி 29 சதவீதத்திலிருந்து 16 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், திருச்சி, மதுரை, கோவை போன்ற பிற விமான நிலையங்களில் குறிப்பிட்ட சில விமானச் சேவைகளுக்கான எரிபொருள் வரி வெறும் 1 சதவீதமாகக் குறைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த முடிவைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள சீமான், "அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் கடும் விலை உயர்வால் சாமானிய மக்கள் அன்றாட வாழ்க்கையை நடத்த முடியாமல் தவித்து வருகின்றனர். மக்கள் வயிற்றுப் பசிக்கு அரிசி வாங்கக்கூடப் பணமின்றி அல்லாடும் இந்த வேளையில், விமான நிறுவனங்களுக்கும் பணக்காரர்களுக்கும் பயன்படும் வகையில் விமான எரிபொருளுக்கான வரியை அரசு கணிசமாகக் குறைத்துள்ளது ஏற்றுக்கொள்ள முடியாதது" எனச் சாடியுள்ளார்.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் வசதி படைத்தவர்களுக்கும் வரிச்சலுகைகளை வாரி வழங்கும் அரசு, ஏழை எளிய மக்களின் உணவுப் பொருட்களின் விலையைக் குறைக்கவும், அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தவும் உடனடியாகத் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சீமான் வலியுறுத்தியுள்ளார்.