"அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது எப்போது? முடியுமா? முடியாதா?" - முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி!
மேகதாது அணை மற்றும் காவிரி நீர் விவகாரத்தில், கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்ற தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யைக் கடுமையாக விமர்சித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது எப்போது? உங்களால் முடியுமா, முடியாதா?" என்று தனது எக்ஸ் தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களும், விவசாயிகள் சங்கங்களும் கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது பலனளிக்காது என எச்சரித்தன. காவிரி நீர் தராத மாநிலத்துடன் சட்டரீதியாகப் போராடுவதே கடந்தகாலப் படிப்பினை.
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தண்ணீரைத் திறந்துவிட உத்தரவிட்டவுடனே, "இப்போதைக்கு நீங்கள் வர வேண்டாம்" எனக்கூறி முதலமைச்சர் விஜய்யை வரவிடாமல் கர்நாடக அரசு தடுத்துவிட்டது.
"கர்நாடகம் சென்றால் காவிரியை கையோடு கொண்டுவந்துவிடலாம்" என நினைத்துச் செயல்பட்டு, தகுந்த எச்சரிக்கைகளையும் மீறி தூது அனுப்பியதால், தற்போது முதலமைச்சர் விஜய் தனிமைப்பட்டு நிற்கிறார். தமிழ்நாட்டின் முதலமைச்சரை வர வேண்டாம் என்று மறுத்த கர்நாடக அரசு, ஆகஸ்ட் 2-ஆம் தேதி தங்கள் மாநிலத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டித் தங்களின் ஒற்றுமையை நிருபித்துவிட்டது.
தமிழ்நாட்டின் வாழ்வாதாரப் பிரச்சினையான காவிரி விவகாரத்தில், இனிமேலாவது கூட்டு ஆலோசனைகளோடு அணுக வேண்டும் என்று கேட்டுக்கொண்ட மு.க.ஸ்டாலின், "தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது எப்போது? முடியுமா முடியாதா?" எனக் காரசாரமாக வினா எழுப்பியுள்ளார்.