தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் எப்போது? முழு அட்டவணை!

 

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 23ல் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் மார்ச் 30ல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. மே 4-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் எஸ்.எஸ். சாந்து, விவேக் ஜோஷி ஆகியோர் அடங்கிய குழு, இன்று மாலை டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டன.

தமிழக தேர்தல் 2026: முழுமையான அட்டவணை

தேர்தல் அறிவிப்பு மற்றும் வேட்புமனு தாக்கல் தொடக்கம்: மார்ச் 30, 2026 (திங்கள்)

வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்: ஏப்ரல் 6, 2026 (திங்கள்)

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை: ஏப்ரல் 7, 2026 (செவ்வாய்)

வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள்: ஏப்ரல் 9, 2026 (வியாழன்)

வாக்குப்பதிவு நாள் : ஏப்ரல் 23, 2026 (வியாழன்)

வாக்கு எண்ணிக்கை நாள்: மே 4, 2026 (திங்கள்)

ஒரே கட்டத் தேர்தல்: தமிழகத்தின் அனைத்து 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகம் முழுவதும் தேர்தல் நன்னடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இதன்படி அரசு புதிய அறிவிப்புகளையோ, திட்டங்களையோ வெளியிட முடியாது. தமிழகத்தில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 12.51 லட்சம் பேர் முதல்முறை வாக்களிக்கும் இளைஞர்கள் ஆவர்.