“சிங்கப்பெண் அதிரடிப்படை எங்கே? மக்கள் தேடும் அவலம்!” - வானதி சீனிவாசன்!
"தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காகத் தொடங்கப்பட்டதாகக் கூறப்பட்ட 'சிங்கப்பெண் அதிரடிப்படை' தற்போது எங்கே இருக்கிறது என்று பொதுமக்கள் தேடும் அவல நிலைதான் நீடிக்கிறது" எனப் பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கடுமையான விமரிசனத்தை முன்வைத்துள்ளார்.
கோவையில் இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன், மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதைக் குறிப்பிட்டுத் தவெக அரசைச் சாடினார். "பெண்களின் பாதுகாப்புக்காகவும், அவர்களின் அவசரத் தேவைகளுக்காகவும் மக்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து செயல்பட வேண்டிய இந்த உன்னதமான அமைப்பு, தற்போது முற்றிலும் தன் செயல்வீரியத்தை இழந்து முடங்கிக் கிடக்கிறது."
"அரசு வெறும் விளம்பரங்களுக்காக அமைப்புகளை உருவாக்கக் கூடாது. பெண்களின் அத்தியாவசியப் பிரச்சினைகளுக்குக் களத்தில் இறங்கிக் குரல் கொடுத்து, உடனடியாகப் பணியாற்றும் ஒரு துடிப்பான அமைப்பாக இது மாற வேண்டும்."
கோவையில் இன்று வீடியோ எடிட்டர் பெண் ஒருவர் மயக்க மருந்து கொடுத்துக் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ள அதே நாளில், வானதி சீனிவாசனின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. "மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளும், மிரட்டல்களும் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. இந்தச் சூழலில், பெண்களைப் பாதுகாக்க வேண்டிய 'சிங்கப்பெண் அதிரடிப்படை' காகித அளவில் மட்டுமே இருப்பது வேதனையளிக்கிறது" என்று அவர் சுட்டிக்காட்டினார்.