விசில் அடித்து ஆபாச பேச்சு... 'சிங்கப்பெண்' போலீசாரைச் சீண்டிய இளைஞர் கைது!

 

விழுப்புரத்தில் இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த 'சிங்கப்பெண்' விசேஷப் படை பெண் உதவி ஆய்வாளரிடம், மதுபோதையில் விசில் அடித்து ஆபாசமாகப் பேசிய வாலிபர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்க அரசால் உருவாக்கப்பட்ட சிறப்புப் படை பெண் காவலரிடமே வாலிபர் அத்துமீறிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் நகரப் பகுதியில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் 'சிங்கப்பெண்' என்ற பிரத்யேக பெண்கள் சிறப்புப் போலீஸ் படை ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகிறது. நேற்று நள்ளிரவு இந்தச் சிறப்புப் படையைச் சேர்ந்த பெண் உதவி ஆய்வாளர் தலைமையிலான போலீசார் முக்கிய வீதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த திலீப்குமார் என்ற இளைஞர், கடுமையான மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

ரோந்து பணியில் இருந்த பெண் உதவி ஆய்வாளரைக் கண்ட திலீப்குமார், பொதுஇடம் என்றும் பாராமல் சைகை காட்டி, விசில் அடித்து வம்பு இழுத்துள்ளார். மேலும், அந்த பெண் அதிகாரி என்றும் பாராமல் ஆபாசமான வார்த்தைகளால் பேசி அநாகரிகமாக நடந்துகொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் உதவி ஆய்வாளர் மற்றும் பாதுகாப்புப் பணியில் இருந்த மற்ற காவலர்கள், உடனடியாக அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

பெண் காவலரிடம் அத்துமீறி அநாகரிகமாக நடந்துகொண்ட குற்றத்திற்காக, திலீப்குமார் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

கைது செய்யப்பட்ட திலீப்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவரை சிறையில் அடைத்தனர். பெண்களுக்கே பாதுகாப்பு கொடுக்கும் பெண் போலீசாரிடமே வாலிபர் ஒருவர் போதையில் அத்துமீறிய இந்தச் சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.