அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட் திடீர் ராஜினாமா!
அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளராகப் பணியாற்றி வந்த கரோலின் லெவிட் ஆகஸ்ட் மாத இறுதியுடன் தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் தனது இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுத்த கரோலின் லெவிட், தனது இரு குழந்தைகளுடனும் குடும்பத்துடனும் கூடுதல் நேரத்தைச் செலவிடுவதற்காகவே இந்த முடிவை எடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.
கரோலின் லெவிட்டின் இந்த முடிவை தான் முழுமையாகப் புரிந்துகொண்டு மதிப்பளிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், "வெள்ளை மாளிகையின் மிகச் சிறந்த செய்தித் தொடர்பாளர்களில் கரோலினும் ஒருவர்" எனப் பாராட்டியுள்ளார்.
பதவி விலகினாலும், வரவிருக்கும் இடைத்தேர்தல்களுக்குக் குடியரசுக் கட்சி மற்றும் அதிபர் டிரம்பின் முக்கிய வெளிப்புற ஆலோசகராக கரோலின் தொடர்ந்து செயல்படுவார் எனக் கூறப்பட்டுள்ளது.
தனது 27-வது வயதில் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளராகப் பொறுப்பேற்ற கரோலின் லெவிட், இந்தப் பதவியை வகித்த மிகக் குறைந்த வயதுடைய நபர் என்ற வரலாற்றைப் படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய செய்தித் தொடர்பாளர் யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெள்ளை மாளிகை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.