undefined

உங்களுக்கு யார் ரைட்ஸ் கொடுத்தா..? கன்னத்தில் அறைந்த பெண் காவலரை அலறவிட்ட ஓட்டுநர்..!

 
வரிசையில் நிற்காமல் சென்ற லாரி ஓட்டுநரை பெண் போக்குவரத்து காவலர் சரமாரியாக அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை எண்ணூரில் உள்ள துறைமுகத்துக்கு சரக்கு ஏற்றி செல்லும் கன்டெய்னர் லாரிகளை ஆவடி சரகத்துக்கு உட்பட்ட மணலி, சாத்தாங்காடு, எர்ணாவூர் சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து காவல்துறையினர் மடக்கி நிறுத்தி வைத்துள்ளனர். இந்நிலையில், இன்று  வரிசையில் நிற்காத லாரி ஓட்டுநர், நேராக துறைமுகத்தை நோக்கி வண்டியை ஓட்டியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த எர்ணாவூர் சந்திப்பில் பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர், அந்த லாரியை மடக்கியுள்ளார். அப்போது அந்த லாரி ஓட்டுநரை பெண் காவலர் சரமாரியாக அறைந்ததாக கூறப்படுகிறது.அனைவருக்கும் முன்னிலையில் வைத்து பெண் காவலர் அடித்ததால் லாரி ஓட்டுநர்  மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

அந்தப் பெண் காவலரை முற்றுகையிட்டார். எப்படி நீங்க என்னை அடிக்கலாம்? உங்களுக்கு யார் அடிக்கிறது ரைட்ஸ் கொடுத்தது? என சரமாரியாக கேள்வியெழுப்பினார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுபற்றி தகவலறிந்த லாரி உரிமையாளர் சங்கத்தினர் அங்கு உடனடியாக வந்து அந்தப் பெண் காவலரை சுற்றி வளைத்தனர். பின்னர், செல்போனில் வீடியோ எடுத்தபடி, "எதுக்கு மேடம் அவரை அடிச்சீங்க?" "எப்படி நீங்கள் அடிக்கலாம்?" எனக் கேள்விகேட்டதால் பெண் காவலர் திணறிப் போனார்.முதலில், தான் அவரை அடிக்கவில்லை என்று கூறிய பெண் காவலர், ஒருகட்டத்தில், "இப்படியே நீங்க பேசுனீங்கனா, எனக்கு லஞ்சம் தர முயற்சி செஞ்சீங்கனு புகார் கொடுப்பேன்" என மிரட்டிப் பேசினார்.

பின்னர் லாரி ஓட்டுநரும், லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரும், "நீங்க கம்ப்ளெய்ன் கொடுங்க மேடம். நாங்க பாத்துக்குறோம்" என  பேசினர். நிலைமை கைமீறி போவதை உணர்ந்த அங்கிருந்த உதவி ஆய்வாளர் அங்கு வந்து அவர்களிடம் சமாதானம் பேசினார்.தொடர்ந்து, தன்னை அடித்ததற்காக பெண் காவலர் மன்னிப்பு கேட்டால் தான் தாங்கள் செல்வோம் எனக் கூறியதை அடுத்து, வேறு வழியின்றி, "சாரி சொல்லிட்டேன் போதுமா.." என அந்தப் பெண் காவலர் கூற, லாரி ஓட்டுநரும், சங்கத்தைச் சேர்ந்தவர்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்நிலையில், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.