தமிழக அரசின் பயிர்க்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் பொருந்தும்? முழு விபரங்கள்!
தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு, கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 14.43 லட்சம் விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இத்திட்டம் யாருக்கெல்லாம் பொருந்தும், தள்ளுபடி சலுகை எவ்வளவு என்பது குறித்து தெரிஞ்சுக்கோங்க.
இத்திட்டத்தின் கீழ் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் தள்ளுபடி வழங்கப்பட மாட்டாது. குறிப்பிட்ட கால வரம்பிற்குள் கடன் பெற்றவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.
2025 மே 1 முதல் 2026 பிப்ரவரி 28 வரை கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே இந்த தள்ளுபடி சலுகை பொருந்தும். இத்திட்டம் எந்தவிதப் பாகுபாடுமின்றி, தகுதியான காலக்கட்டத்தில் கடன் பெற்ற அனைத்துத் தரப்பு விவசாயிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறு விவசாயிகள், சிறு விவசாயிகள், இதர விவசாயிகள் என விவசாயிகள் பெற்ற கடன் தொகையின் அடிப்படையில் தள்ளுபடித் தொகை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு வங்கிகளில் ரூ. 75,000 அல்லது அதற்குள் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு அவர்கள் பெற்ற முழுத் தொகையும் தள்ளுபடி செய்யப்படுகிறது. அதே சமயம் ரூ. 75,000-க்கும் அதிகமாகப் பயிர்க்கடன் வாங்கியுள்ள விவசாயிகளுக்கு அதிகபட்சமாக ரூ. 35,000 வரை தள்ளுபடி செய்யப்படுகிறது. மீதமுள்ள தொகையை மட்டுமே அவர்கள் செலுத்த வேண்டியிருக்கும்.
புதிய அரசு பொறுப்பேற்ற ஒரு மாத காலத்திற்குள் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த அதிரடித் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 14,43,504 விவசாயிகள் நேரடியாகக் கடன் சுமையில் இருந்து விடுபட்டுப் பயனடைவார்கள் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் குறு, சிறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.