5 மாநிலங்களில் ஜெயிக்கப் போவது யார்? யார்? - எகிறும் எதிர்பார்ப்பு... இன்று தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை!
இந்திய அரசியலில் மினி பாராளுமன்றத் தேர்தல் என்று அழைக்கப்படும் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று முடிவடைந்த நிலையில், தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் புதிய அரசைத் தேர்ந்தெடுக்க வாக்குப்பதிவு முடிந்த நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கைத் துவங்குகிறது. இன்னும் சற்று நேரத்தில் ஐந்து மாநிலங்களிலும் மகுடம் சூடப் போவது யார் யார் என்கிற கேள்விக்கான விடைத் தெரிந்து விடும்.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அனல் பறந்த தேர்தல் பிரசாரங்கள், கூட்டணிக் கணக்குகள் மற்றும் அரசியல் மோதல்களுக்குப் பிறகு, மக்களின் மனநிலை என்ன என்பதைத் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டும் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தபால் வாக்குகளின் எண்ணிக்கையுடன் 8 மணிக்குத் தொடங்குகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை 234 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதியே தேர்தல் முடிந்துவிட்டாலும், மேற்கு வங்கத்தின் இறுதிக்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைய வேண்டியிருந்ததால், வாக்கு எண்ணிக்கை இன்று 5 மாநிலங்களிலும் ஒரே நாளில் நடைபெற உள்ளது. திமுக தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்குமா அல்லது அதிமுக - பாஜக கூட்டணி அரியணையை மீட்குமா என்பதே இங்கு பிரதான கேள்வியாக உள்ளது.
இந்தத் தேர்தலில் நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்' முதல் முறையாகக் களமிறங்கியுள்ளதால், அது யாருடைய வாக்கு வங்கியைப் பாதிக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. குறிப்பாக, இளைஞர்களின் வாக்குகள் எந்தப் பக்கம் திரும்பியுள்ளது என்பது இன்று மாலை வெளியாகும் கருத்துக்கணிப்புகளில் ஓரளவிற்குத் தெரியவரும்.
அண்டை மாநிலமான கேரளாவில் இடதுசாரி முன்னணி (LDF) மூன்றாவது முறையாக வரலாற்றுச் சாதனை படைக்குமா அல்லது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) ஆட்சியைப் பிடிக்குமா என்பதில் இழுபறி நீடிக்கிறது. மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை, மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே மீண்டும் ஒரு கடும் போர் நடந்துள்ளது.
அசாமில் பாஜக தனது ஆட்சியைத் தக்கவைக்குமா என்பதும், புதுச்சேரியில் ஆட்சி மாற்றம் நிகழுமா என்பதும் இன்று வாக்கு எண்ணிக்கையில் தெரிந்துவிடும்.