டி20 உலகக் கோப்பை வெல்லப்போவது யார்? இந்தியா vs நியூசிலாந்து இன்றிரவு மோதல்!

 

இன்று மார்ச் 8ம் தேதி கிரிக்கெட் உலகின் மிக முக்கியமான நாளாகும். ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2026 தொடரின் மாபெரும் இறுதிப் போட்டி இன்று இரவு நடைபெற உள்ளது. தற்போது நடப்புச் சாம்பியனாக இருக்கும் இந்தியா, தனது மகுடத்தைத் தக்கவைத்துக் கொள்ள இன்று நியூசிலாந்துடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

இன்று இரவு 7 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா vs நியூசிலாந்து  இறுதிப் போட்டி நடைபெறுகிறது.  ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டிவி மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் செல்போன் செயலியிலும், இணையதளத்திலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. சஞ்சு சாம்சனின் அதிரடி பேட்டிங் மற்றும் ஜஸ்பிரித் பும்ராவின் துல்லியமான பந்துவீச்சு அணியின் மிகப்பெரிய பலமாக உள்ளது. இந்தியா இன்று வென்றால், தொடர்ந்து இரண்டாவது முறையாகக் கோப்பையை வென்று வரலாறு படைக்கும்.

மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி, அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மிரட்டியது. பின் ஆலன் மற்றும் டிம் சீஃபர்ட் ஜோடி தொடக்கத்திலேயே அதிரடி காட்டினால் இந்தியாவிற்குச் சவாலாக இருக்கும்.

பல்வேறு விளையாட்டு ஆய்வாளர்கள் மற்றும் பெட்டிங் தளங்களின் கணிப்புப்படி, இந்தியா 60% வெற்றி வாய்ப்புடன் முன்னிலையில் உள்ளது. இருப்பினும், ஐசிசி தொடர்களில் நியூசிலாந்து எப்போதும் இந்தியாவிற்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்வது குறிப்பிடத்தக்கது.

இன்று இரவு 7 மணிக்குத் தொடங்கும் இந்தப் போட்டியில், டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்ய வாய்ப்புள்ளது (பனிப்பொழிவு காரணியால்). 1.3 லட்சம் ரசிகர்கள் முன்னிலையில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் போட்டி நடைபெற உள்ளது.