முதல்வர் விஜய்யின் கவனம் ஈர்த்த 'குட்டி போலீஸ்' - யார் இது? சுவாரஸ்ய பின்னணி!

 

சென்னையில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு விழாவில் முதலமைச்சர் விஜய்-ஐ நேரில் சந்தித்து சல்யூட் அடித்த சிறுவனின் நிகழ்வு சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் 'போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு' மாநில அளவிலான உறுதிமொழி ஏற்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதலமைச்சர் விஜய், போதைப்பொருள் கடத்தலைத் தடுத்துச் சிறப்பாகச் செயல்பட்ட 15 காவல் அதிகாரிகளுக்கு 2026-ஆம் ஆண்டிற்கான காவல் பதக்கங்களை வழங்கி கௌரவித்தார்.

விருது பெற்ற அதிகாரிகளில் ஒருவரான ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் ஐ.பி.எஸ்., தனது குடும்பத்தினருடன் விழாவுக்கு வந்திருந்தார். அவரது பள்ளிச் செல்லும் மகனும் காவலர் சீருடை அணிந்து வந்திருந்தார். மேடைக்கு வர விரும்பி அடம் பிடித்த சிறுவனை, எஸ்.பி. சந்தீஷ் தன்னுடன் மேடைக்கு அழைத்துச் சென்றார். சிறுவனைக் கண்ட முதலமைச்சர் விஜய், அவனைத் தூக்கி அன்போடு விசாரித்தார்.

கீழே இறங்கி நின்ற அச்சிறுவன், மற்ற காவல் அதிகாரிகளைப் போல முதலமைச்சருக்கு எதிரில் கம்பீரமாக நின்று சல்யூட் அடித்தான். பதிலுக்கு முதலமைச்சரும் புன்னகையோடு சல்யூட் அடிக்கவே, அந்த 'குட்டி போலீஸ்' காட்சி இணையத்தில் வைரலானது.