யார் இந்த சாய்குமார்? - தமிழக அரசின் புதிய தலைமை செயலாளர்!

 

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையத்தின் அதிரடி உத்தரவின்படி தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக டாக்டர் எம். சாய்குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

எம். சாய்குமார் 1990-ம் ஆண்டு பேட்ச் சேர்ந்த தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஆவார். சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல்வேறு முக்கியத் துறைகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக இருந்தபோது, அவரது முதன்மைச் செயலாளராக பணியாற்றியவர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு மின்வாரியத் தலைவராக இருந்து, மின் தட்டுப்பாட்டைச் சமாளிப்பதில் திறம்படச் செயலாற்றியவர் என்ற பெயர் இவருக்கு உண்டு. அண்மையில் வருவாய் நிர்வாக ஆணையராக இருந்த ராஜேஷ் லக்கானி மத்தியப் பணிக்குச் சென்றதை அடுத்து, அந்தப் பொறுப்பையும் கவனித்து வந்தார்.

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், செய்தித்தாள் நிறுவனம் ஆகியவற்றின் மேலாண்மை இயக்குநராகவும், பொதுப்பணித் துறைச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டமும், சென்னை பல்கலைக்கழகத்தில் பொது விவகாரங்களில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். ஆரம்பக் காலத்தில் தர்மபுரி மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, சமூக விழிப்புணர்வுப் பணிகளில் ஈடுபாடு காட்டியவர்.

தேர்தல் நேரங்களில் நிர்வாகத்தில் நடுநிலைத்தன்மையை உறுதி செய்யத் தேர்தல் ஆணையம் எடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே, தற்போதுள்ள தலைமைச் செயலாளர் முருகானந்தம் மாற்றப்பட்டு, சாய்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று மாலை 6 மணிக்குள் இவர் பொறுப்பேற்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.