"உன்ன எவன் கோட் போட வேண்டாம்ன்னு சொன்னது?" - முதலமைச்சர் விஜய்யை ஒருமையில் விமர்சித்த ஆ.ராசா!
"நான் எவ்வளவோ அரசியல் பார்த்திருக்கிறேன்" என்று தவெக-வின் அரசியல் நகர்வுகளைக் கடுமையாக விமர்சித்துள்ள திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, முதலமைச்சர் விஜய்யின் அண்மைக்காலப் பேச்சுக்களை ஒருமையில் சாடிப் பேசியுள்ளது அரசியல் வட்டாரங்களில் புயலைக் கிளப்பியுள்ளது.
திமுகவின் அவசர ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, தவெக அரசின் செயல்பாடுகள் மற்றும் முதலமைச்சரின் பேச்சுக்கள் குறித்துத் தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தார்.
"தமிழகத்தில் தற்பொழுது ஒரு விசித்திரமான அரசியல் சூழல் நிலவி வருகிறது. தவெக தலைவர்கள் தங்களாகவே ஒரு பொய்யான வதந்தியைச் சமுக வலைதளங்களிலும் மேடைகளிலும் கட்டமைக்கிறார்கள். பின்னர், அந்தப் பொய்க்குத் தங்களாகவே ஒரு பதிலைச் சொல்லி, அதையே தங்களின் அரசியல் வெற்றியாகக் காட்டிக் கொள்கிறார்கள். நான் எனது நீண்டகால அரசியல் வாழ்க்கையில் எவ்வளவோ அரசியல் நகர்வுகளைப் பார்த்திருக்கிறேன்; ஆனால், இப்படியொரு பாணியை நான் கண்டதில்லை" என ஆ.ராசா சாடினார்.
அண்மையில் நடைபெற்ற தவெக பொதுக்குழு மற்றும் கட்சியின் கொள்கை விளக்கக் கூட்டங்களில், தனது உடைக் கட்டுப்பாடு குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சிப்பதாக முதலமைச்சர் விஜய் பேசியிருந்த கருத்திற்கு ஆ.ராசா தற்பொழுது மிகக் காட்டமான பதிலடி கொடுத்துள்ளார்.
"நான் ஏன் கோட் சூட் போடக்கூடாதா? என்று முதலமைச்சர் விஜய் மேடைகளில் கேட்கிறார். நான் அவரிடம் நேரடியாகக் கேட்கிறேன், 'உன்ன யாரு கோட் சூட் போட வேண்டாம் என சொன்னா?'... அவர் கோட் சூட் அணிந்து கொள்வதால் ஏதோ நாங்களெல்லாம் அவர் மீது பொறாமைப்படுவது போலவும், அதற்கு ஏதோ பெரிய அரசியல் எதிர்ப்பு இருப்பது போலவும் ஒரு மாயத் தோற்றத்தை அவர் தனது பேச்சின் மூலம் உருவாக்க முயல்கிறார். நீ நன்றாகவே கோட் சூட் போட்டுக்கொள்; அதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை" என ஆ.ராசா ஒருமையில் விமர்சித்துப் பேசியுள்ளார்.
நாடாளுமன்ற 'இந்தியா' கூட்டணிக் கூட்டத்தைப் புறக்கணிக்க திமுக முடிவு செய்துள்ளதாக வெளியாகி வரும் தேசிய அரசியல் திருப்பங்களுக்கு மத்தியில், தமிழகத்தின் ஆளுங்கட்சித் தலைவரை எதிர்க்கட்சியான திமுகவின் மூத்த தலைவர் ஒருவர் ஒருமையில் பேசியிருப்பது தவெக தொண்டர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.