ஜெயிக்கப் போவது யாரு?! அண்ணன் திமுக; தம்பி அதிமுக? ஆண்டிபட்டியில் 3-வது முறையாக தொடரும் சகோதர யுத்தம்?!

 

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற ஆளுமைகள் வென்றெடுத்த அதிமுகவின் கோட்டையான ஆண்டிபட்டி, கடந்த சில ஆண்டுகளாக ஒரு குடும்பத்திற்குள்ளான அரசியல் போர்க்களமாக மாறியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலிலும் திமுக சார்பில் அண்ணன் மகாராஜனும், அதிமுக சார்பில் தம்பி லோகிராஜனும் மீண்டும் களம் காண்கின்றனர்.

முதன்முறையாக அண்ணன் - தம்பி மோதிய 2019 இடைத்தேர்தலில், திமுகவின் மகாராஜன் 12,323 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இரண்டாவது முறையாக 2021 பொதுத்தேர்தலில் மோதுகையில், மீண்டும் மகாராஜன் 8,538 வாக்குகள் வித்தியாசத்தில் தம்பி லோகிராஜனைத் தோற்கடித்தார். கடந்த இரண்டு தேர்தல்களிலும் அதிமுகவின் வெற்றி வாய்ப்பை அமமுக வேட்பாளர் ஜெயக்குமார் பிரித்த வாக்குகள் தடுத்ததாகக் கருதப்படுகிறது. ஆனால், இந்த முறை அதிமுக - அமமுக கூட்டணி அமைந்துள்ளதால், பிரிந்து சென்ற வாக்குகள் மீண்டும் தம்பி லோகிராஜனுக்குக் கிடைக்கும் என அதிமுகவினர் நம்பிக்கையில் உள்ளனர். "இழந்த கோட்டையை மீட்டே தீருவோம்" என இரட்டை இலைத் தரப்பு தீவிரப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது.

நடப்பு எம்.எல்.ஏ மகாராஜன், கடந்த 5 ஆண்டுகளில் தொகுதியில் செய்த வளர்ச்சிப் பணிகள் மற்றும் திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களை (மகளிர் உரிமைத்தொகை போன்றவை) முன்வைத்து வாக்கு சேகரிக்கத் தொடங்கியுள்ளார். ஏற்கனவே இரண்டு முறை வெற்றி பெற்ற பலம் மற்றும் உதயசூரியன் சின்னத்தின் செல்வாக்கு தமக்கு 'ஹாட்ரிக்' வெற்றியைத் தரும் என மகாராஜன் தரப்பு உற்சாகமாக உள்ளது.