ஜெயிக்கப் போவது யாரு? தவெக, நாம் தமிழர் வாக்கு சதவீதம் எவ்வளவு - கருத்துக்கணிப்பு!

 

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அக்னி நியூஸ் சர்வீசஸ் மேற்கொண்டுள்ள புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இதில் திமுக கூட்டணி மீண்டும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சியைத் தக்கவைக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி 178 இடங்களைக் கைப்பற்றி அசுர பலத்துடன் மீண்டும் ஆட்சியில் அமரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணி 56 இடங்களைப் பிடித்து இரண்டாம் இடத்தைப் பெறும் எனத் கணிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) முதல் தேர்தலிலேயே 11.5 சதவீத வாக்குகளைப் பெற்று கவனத்தை ஈர்க்கும் என்றும், சீமானின் நாம் தமிழர் கட்சி 5.6 சதவீத வாக்குகளைப் பெறும் என்றும் ஆய்வு கூறுகிறது.

திமுக கூட்டணிக்குச் சாதகமாக அமைந்துள்ள மண்டல வாரியான தரவுகளைப் பார்த்தால் சென்னை மண்டலத்தில் 37 தொகுதிகளில் 36 இடங்களில் திமுக கூட்டணி வெல்லும். அதிமுக 1 இடத்தில் மட்டுமே வெல்ல வாய்ப்பு. மத்திய மண்டலத்தில் 37-இல் 35 இடங்களை திமுக கைப்பற்றித் தனது கோட்டையாக மாற்றும். தென் மண்டலத்தில் 58 தொகுதிகளில் 42 இடங்களை திமுகவும், மீதமுள்ள இடங்களை அதிமுகவும் பகிர்ந்து கொள்ளும்.

மாநில அளவில் கட்சிகள் பெறப்போகும் வாக்கு சதவீதக் கணிப்புகளைப் பார்க்கையில் திமுக கூட்டணி 45.4% வாக்குகளையும், அதிமுக கூட்டணி 35.3% வாக்குகளையும், தமிழக வெற்றிக் கழகம் 11.5% வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி 5.6% வாக்குகளையும் பெறுகின்றன

சென்னை, திருவள்ளூர், திருச்சி, தஞ்சாவூர் மற்றும் காஞ்சிபுரம் போன்ற முக்கிய மாவட்டங்களில் திமுக கூட்டணி அனைத்து இடங்களையும் வெல்லும் எனக் கணிப்புகள் கூறுகின்றன. மேலும், நீலகிரி, கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் திமுக 100% இடங்களைக் கைப்பற்றும் என ANS ஆய்வு தெரிவித்துள்ளது.