"எங்களை மட்டும் ஏன் கேக்குறீங்க?" - மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 குறித்து அமைச்சர் செங்கோட்டையன் கருத்தால் சர்ச்சை!
தமிழகத்தில் மகளிருக்கு மாதம் ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும் என்பது குறித்துத் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், மகளிருக்கான உரிமைத்தொகை உயர்வு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில், "தமிழகம் தற்போது சுமார் ரூ.13.32 லட்சம் கோடி கடனில் உள்ளது. இந்த நிதி நிலைமையை முதலில் சீரமைக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது."
"கடந்த ஆட்சியில் திமுக அரசு மகளிருக்கான ரூ.1,000 உதவித்தொகையை ஆட்சிக்கு வந்தவுடனே வழங்கவில்லை; இரண்டரை ஆண்டுகள் கழித்து தான் வழங்கினார்கள். ஆனால், எங்களை மட்டும் ஆட்சியில் அமர்ந்த உடனே 'ரூ.2,500 எப்போது தருவீர்கள்?' என்று ஏன் கேட்கிறீர்கள்?" எனக் கேள்வி எழுப்பினார்.
தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்ட ரூ.2,500 உரிமைத்தொகையை எதிர்பார்த்துக் காத்திருந்த பெண்களுக்கு அமைச்சரின் இந்தப் பேச்சு ஏமாற்றத்தை அளிப்பதாகப் பல்வேறு தரப்பினர் விமர்சித்து வருகின்றனர்.
தவெக அரசு தனது முதலாவது பொது பட்ஜெட்டை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தாக்கல் செய்யவுள்ள நிலையில், பட்ஜெட்டுக்கு முன்பே நிதிச்சுமையைக் காரணம் காட்டி அமைச்சர் கூறியுள்ள இந்த விளக்கம் அரசியல் களத்தில் புதிய காரசார விவாதங்களைத் தோற்றுவித்துள்ளது.