"அரியலூரில் எச்சரித்த போலீஸ், கரூரில் நாடகமாடியது ஏன்?"- கரூரில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் - முதல்வர் விஜய் உருக்கம்!
கரூர் மாவட்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், அண்மையில் கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்து குறித்துப் பேசும்போது மிகுந்த உணர்ச்சிவசப்பட்டார். தவெக அரசு மற்றும் தன் மீது எதிர்க்கட்சிகள் வைக்கும் விமரிசனங்களுக்குப் பதிலடி கொடுத்ததுடன், விபத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாகக் கரூரில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்.
விபத்து நடந்த தினத்தில் காவல்துறையின் செயல்பாடுகள் திட்டமிட்ட நாடகம் என்று குற்றம்சாட்டிய முதலமைச்சர் விஜய், அரியலூர் சம்பவத்தை ஒப்பிட்டுக் காட்டினார். "நாங்கள் பெரம்பலூரில் இருந்து அரியலூர் சென்ற போது, அங்கு ஆபத்து இருப்பதாகக் காவல்துறையினர் எங்களை முன்கூட்டியே எச்சரித்தனர். அவர்கள் கூறியதை ஏற்று, மக்கள் நலன் கருதி நாங்கள் உடனடியாகப் பயணத்தை ரத்து செய்துவிட்டுத் திரும்பினோம். இதற்காக அரியலூர் மக்களிடம் நாங்களே மன்னிப்பும் கேட்டோம்.
ஆனால், நாமக்கல்லில் இருந்து கரூர் வந்த போது, காவல்துறையினர் எங்களை ஏன் அப்படி 'அலர்ட்' செய்யவில்லை? அங்கு அத்தனை பெரிய கூட்டம் கூடியிருப்பது போலீசாருக்குத் தெரியாதா? அவர்கள் நினைத்திருந்தால் அன்றைய நிகழ்ச்சியை ரத்து செய்திருக்கலாம். ஆனால், நெடுஞ்சாலையில் இருந்து எங்களை போலீசாரே நேராக அழைத்து வந்து சம்பவம் நடந்த கூட்ட நெரிசல் இடத்தில் விட்டனர். இதில் போலீசார் மிகப் பெரிய நாடகம் நடத்தியுள்ளனர்."
"போலீசாரை அப்படி நடக்கச் சொல்லிப் பின்னணியில் இருந்து அழுத்தம் கொடுத்தது யார்? அந்த நோக்கம் தெரியாமல் நான் போலீசாரை நம்பி விட்டேன்" எனக் குறிப்பிட்ட விஜய், தன் மீது பழி போடுபவர்களைக் கடுமையாகச் சாடினார்.
"அந்தக் கரூர் சம்பவத்தில் நாம் தங்கப் பிள்ளைகளையும், பச்சைப் பிள்ளைகளையும், குடும்ப உறவுகளையும் இழந்து தவிக்கிறோம். அப்படி வலியோடு இருக்கும் என்னை ஏளனமாகப் பேசுகிறீர்களே... ஓடி ஒளிந்தேன் எனப் பழி போடுகிறீர்களே... வாய் ஒன்று இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா? அரசியல் ஆதாயம் தேட உங்களுக்கு எப்படி மனசு வருகிறது?" என்று கேள்வி எழுப்பினார்.
"மக்கள் நலனுக்காகவே நான் அரசியலுக்கு வந்தவன். அவர்களைக் காக்க வைத்து அரசியல் ஆதாயம் தேடுபவன் அல்ல. 'தாய் மாமன் சீர் சீக்கிரம் வரும்... நான் ரியல் தாய்மாமன், ரீல் தாய்மாமன் இல்ல' என்று குறிப்பிட்ட அவர், கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்கள் நினைவாகத் தவெக சார்பில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும்" என அறிவித்தார்.
நமக்கு இத்தனை வலிகள், காயங்கள் கொடுத்தவர்களுக்குக் கால காலத்துக்கும் எழ முடியாத அளவுக்கு நிரந்தரமாகப் பதிலடி கொடுக்க வேண்டும். அதற்கு 2026 சட்டமன்றத் தேர்தலில் கொடுத்த பதிலடி மட்டும் போதாது எனத் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
அரசுத் துறைகளில் நடக்கும் ஊழல்கள் குறித்துப் பேசிய முதலமைச்சர், முந்தைய ஆட்சியாளர்களைத் தீய சக்தி, தீர்ந்து போன சக்தி எனக் குறிப்பிட்டு விமரிசித்தார். "ஒவ்வொரு டிபார்ட்மென்ட்லயும் 'பார்ட்டி பண்ட்', 'கட்சி நிதி' என்ற பெயரில் கொள்ளையடிப்பதுதான் இவர்களின் வேலை. தீய சக்தியாக இருந்தாலும் சரி, தீர்ந்து போன சக்தியாக இருந்தாலும் சரி, இரண்டு பேரும் மாறி மாறி இதையே தான் செய்து கொண்டிருக்கிறார்கள். சட்டசபையில் நான் கட்சி நிதி என்று சொன்னவுடன் ஓடினார்கள் பாருங்கள் ஒரு ஓட்டம்!" என்றார்.
சென்னையில் ஒரு புதிய பாலம் கட்டுவதில் முந்தைய ஆட்சியில் பெருமளவில் ஊழல் செய்யப்பட்டுள்ளதைக் தற்போதைய அரசு கண்டுபிடித்து, அந்தத் திட்டத்தையே ரத்துச் செய்துள்ளதாகத் தெரிவித்தார். ஊழலில் ஊறிப்போனவர்கள் தற்பொழுது தவெக அரசின் நடவடிக்கைகளால் தொடர்ந்து கதறிக் கொண்டிருக்கிறார்கள் என்றும், தோண்ட தோண்ட ஊழல் வந்துகொண்டே இருக்கிறது என்றும் கூறினார்.
"லஞ்சம், ஊழல் எல்லாம் ஒழிக்கவே முடியாது என்று சவால் விட்டவர்கள் தற்பொழுது அரசு அலுவலகங்களுக்குச் சென்று பாருங்கள். மக்கள் இன்று ஒரு பைசா செலவில்லாமல் தங்களது வேலைகளை முடித்துக் கொள்கிறார்கள். அரசு அலுவலகங்களில் தங்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதாக மக்களே என்னிடம் கூறுகிறார்கள். மக்கள் மனதில் இருக்கும் இந்தச் சந்தோஷத்தைப் பார்ப்பதை விட எனக்கு வேறு என்ன வேண்டும்?" என முதலமைச்சர் விஜய் தனது உரையை நிறைவு செய்தார்.