வீடு புகுந்து புதுமாப்பிள்ளையை வெட்டியது ஏன்? - வாலிபர்கள் பரபரப்பு வாக்குமூலம்!
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் வீடு புகுந்து புதுமாப்பிள்ளையை அரிவாளால் வெட்டிய வழக்கில் கைதான வாலிபர்கள் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தெப்பக்குளம் வடக்கு ரத வீதியைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் முத்து கணேசன் (29). இவர் தனியார் சோலார் நிறுவனத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு மகேஸ்வரி என்பவருடன் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
கடந்த 2-ம் தேதி மதியம் முத்து கணேசன் தனது வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, முகமூடி அணிந்து வந்த 2 மர்மநபர்கள் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பிச் சென்றனர். இத்தாக்குதலில் படுகாயமடைந்த முத்து கணேசனுக்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின், நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் முருகன் தலைமையில் தனிப்படை அமைத்துத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் மகன் விஷ்வா (23), அவரது சித்தப்பா மகன் கருப்பசாமி (20) ஆகிய இருவரும் சேர்ந்து இந்தத் தாக்குதலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மதுரையில் பதுங்கியிருந்த அவர்களைப் போலீசார் கைது செய்தனர்.
போலீசாரின் விசாரணையின்போது கைதான இருவரும் அளித்த வாக்குமூலத்தில், முத்து கணேசனின் தம்பி மாரிசெல்வம், ஒரு சிறுமியுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தைச் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இது குறித்துச் சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், மாரிசெல்வத்தை எட்டயபுரம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சிறுமியை மாரிசெல்வம் அவமானப்படுத்திய ஆத்திரத்தில்தான், அவரது அண்ணனான முத்து கணேசனை தாங்கள் வீடு புகுந்து அரிவாளால் வெட்டியதாக விஷ்வாவும் கருப்பசாமியும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.