பாஜக அரசை 'நம்பர் 16' என விமர்சித்தது ஏன்? ராகுல் காந்தி போட்ட விடுகதை!
நாடாளுமன்றத்தில் மத்திய பாஜக அரசை 'எண் 16' உடன் ஒப்பிட்டு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியிருப்பது, அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தையும் புதிரையும் கிளப்பியுள்ளது.
மக்களவையில் தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாக்கள் மீதான விவாதத்தின் போது பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியின் உரை மற்றும் அமெரிக்காவுடனான சமீபத்திய ஒப்பந்தம் குறித்துக் கடும் விமர்சனங்களை முன்வைத்தார். அப்போது அவர் குறிப்பிட்ட ஒரு விஷயம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
"நேற்று பிரதமர் உரையாற்றுவதைக் கவனித்தேன். அவரிடம் வழக்கமான ஆற்றல் இல்லை. ஏதோ ஒரு வகையில் பிரதமர் சமரசத்திற்கு உள்ளாகியிருப்பது அவரது பேச்சில் தெரிந்தது. நான் எனது அலைபேசியில் தேதியைப் பார்த்தபோது அது ஏப்ரல் 16 எனக் காட்டியது. உடனே எனக்குள் ஒரு வியப்பு ஏற்பட்டது. அனைத்து புதிருக்குமான விடை அந்த '16' என்ற எண்ணில்தான் இருக்கிறது" என ராகுல் காந்தி பேசினார்.
மேலும், "இந்த 16 எனும் எண்ணின் ரகசியம் யாருக்காவது தெரிந்தால், அதை எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிடலாம்" எனப் பொதுமக்களுக்கும், அரசியல் நோக்கர்களுக்கும் அவர் சவால் விடுத்தார். ராகுல் காந்தியின் இந்தப் பேச்சுக்குப் பிறகு, #Number16 மற்றும் #RahulGandhi போன்ற ஹேஷ்டேக்குகள் இணையத்தில் வைரலாகத் தொடங்கின.
இந்த 16-ன் பின்னணி குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்கள் ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், "இது ஒரு புதிர். இதற்கான பதிலை நான் இவ்வளவு எளிதில் சொல்லிவிட மாட்டேன்" எனச் சிரித்துக் கொண்டே கூறிவிட்டுச் சென்றார்.
சமூக வலைதளங்களில் இதற்கான காரணங்களை நெட்டிசன்கள் அலசி வருகின்றனர். சிலர், பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளில் செய்த 16 முக்கியத் தோல்விகளைக் குறிப்பிடுகிறார் எனப் பதிவிடுகின்றனர். மற்றவர்கள், இது ஏப்ரல் 16-ல் கையெழுத்தான ஏதோ ஒரு ரகசிய ஒப்பந்தத்தைக் குறிப்பதாகக் கூறுகின்றனர். 2014-ல் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு நடந்துள்ள 16-வது முக்கிய அரசியல் மாற்றம் இது எனச் சிலர் கணிக்கின்றனர்.
ராகுல் காந்தி எதைக் குறிப்பிட்டு '16' என்றார் என்பது இன்னும் மர்மமாகவே உள்ள நிலையில், பாஜக தரப்பிலிருந்து இதற்குக் கடுமையான பதிலடி கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.