"அதிமுகவுக்கு ஏன் கொடுத்தீங்க?" - பழனியில் எல். முருகன் காரை முற்றுகையிட்ட பாஜகவினர்! 

 

பழனி: சட்டமன்றத் தேர்தல் கூட்டணிப் பங்கீட்டில் பழனி தொகுதி அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அதிருப்தியடைந்த பாஜக தொண்டர்கள், பழனிக்கு வந்த மத்திய இணை அமைச்சர் எல். முருகனைச் சூழ்ந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உலக நலன் வேண்டி பழனி புலிப்பாணி ஆசிரமத்தில் நடைபெற்ற சிறப்பு யாகத்தில் பங்கேற்க எல். முருகன் வருகை தந்தார். அவர் ஆசிரமத்தை விட்டு வெளியே வந்தபோது, பாஜக இளைஞரணி தலைவர் ஸ்ரீதர் தலைமையில் திரண்டிருந்த 50-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் அவரது காரை மறித்தனர்.

"பழனி தொகுதியில் பாஜக வலுவாக இருந்தும், அதை ஏன் அதிமுகவுக்கு விட்டுக்கொடுத்தீர்கள்? எங்களுக்குப் பலமில்லாத தொகுதிகளைப் பெற்றுத் தந்து எங்களை ஏமாற்றிவிட்டீர்கள்" என அமைச்சரிடம் ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பழனி தொகுதியை பாஜகவுக்கு மீண்டும் பெற்றுத் தராவிட்டால், அனைவரும் ஒட்டுமொத்தமாகக் கட்சியில் இருந்து விலகப் போவதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

தொண்டர்களின் அடுக்கடுக்கான கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் எல். முருகன் காரில் ஏறி அமர்ந்தார். ஆனால், ஆத்திரமடைந்த தொண்டர்கள் காரின் முன்னே தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக அமைச்சர் ஆசிரமத்தை விட்டு வெளியேற முடியாமல் காரிலேயே முடங்கினார். இறுதியில் மற்ற கட்சி நிர்வாகிகள் சமாதானம் செய்ததைத் தொடர்ந்து, தொண்டர்கள் வழிவிட்டனர்.

ஏற்கனவே பழனி தொகுதியில் பாஜக நிர்வாகிகள் தலைமைக்கு எதிராகத் தேங்காய் உடைத்துப் போராட்டம் நடத்தியிருந்த நிலையில், தற்போது மத்திய அமைச்சரையே முற்றுகையிட்டது அதிமுகவினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணியில் இருந்தாலும், அடிமட்டத் தொண்டர்களிடையே நிலவும் இந்த மோதல் தேர்தல் வெற்றியைப் பாதிக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.