அதிமுகவில் இணைந்தது ஏன்? காளியம்மாள் சொன்ன அடடே காரணம்! 

 

தமிழக அரசியலில் ஒரு காலத்தில் 'நாம் தமிழர்' கட்சியின் அடையாளமாகத் திகழ்ந்த காளியம்மாள், இன்று அதிகாரப்பூர்வமாக அதிமுகவில் இணைந்திருப்பது 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.  நீண்ட நாட்களாக நிலவி வந்த அரசியல் யூகங்களுக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் முன்னணிப் பேச்சாளராகவும், மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்த காளியம்மாள், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய பிறகு அவர் 'தமிழக வெற்றி கழகத்தில்' இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. "அதிமுகவின் தலைமை ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவர். ஒரு சாமானியன் உழைப்பால் கட்சியின் உச்சாணிக் கொம்பிற்கு வர முடியும் என்ற ஜனநாயகச் சூழல் அதிமுகவில் மட்டுமே இருக்கிறது" என்று எடப்பாடி பழனிசாமியின் தலைமையைப் புகழ்ந்தார். தான் ஒரு தமிழனின் தலைமையின் கீழ் இயங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததாகவும், அதற்கேற்ற களம் அதிமுகதான் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இது தனது தனிப்பட்ட முடிவு அல்ல, தனது ஆதரவாளர்கள் மற்றும் மக்களுடன் கலந்து பேசி எடுத்த கூட்டு முடிவு என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

அதிமுகவில் இணைந்த கையோடு, தமிழகத்தை உலுக்கியுள்ள வேதாந்தம் மாணவி கொலை வழக்கு குறித்துக் காளியம்மாள் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார்: "பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைய வேண்டும் என்றால் தண்டனைகள் பயங்கரமாக இருக்க வேண்டும். நான் பொதுவாக மரண தண்டனைக்கு எதிரானவள் தான், ஆனால் சிறுமிகளைச் சீரழிக்கும் மிருகங்களுக்கு மரண தண்டனை கொடுப்பதில் தவறில்லை" என பேசினார்.

திமுக அரசின் நான்கரை ஆண்டுகால ஆட்சி குறித்துப் பேசிய அவர், "நான் சொல்வதை விட, மக்கள் தேர்தலில் பதிலடி கொடுப்பார்கள்" என வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் தோல்வி உறுதி”

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளரான இவர், மேடைப் பேச்சால் பலரை ஈர்த்தவர். 2019 வட சென்னை நாடாளுமன்றத் தொகுதி, 2021 பூம்புகார் சட்டமன்றத் தொகுதி மற்றும் 2024 மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி என மூன்று முறை நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்றவர். காவிரி டெல்டா பகுதிகளில் செல்வாக்கு மிக்கப் பேச்சாளராக இருக்கும் காளியம்மாளின் வருகை, அந்தப் பகுதியில் அதிமுகவின் வாக்கு வங்கியை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.