தவெகவை ஆதரித்தது ஏன்? - சிபிஎம் பெ.சண்முகம் விளக்கம்!

 

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக ஆட்சி அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) வெளியிலிருந்து ஆதரவளித்தது. சிபிஎம் கட்சியின் இந்த அதிரடி அரசியல் நகர்வு குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தற்பொழுது தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் விரிவான விளக்கமளித்துள்ளார். தவெகவிற்கு ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவாளர்கள் முன்வைத்து வரும் கடுமையான விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்த விளக்கம் அமைந்துள்ளது.

தங்கள் தரப்பு நியாயங்கள் குறித்துத் தனது எக்ஸ் பதிவில், "அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் மூலம் தமிழக அரசியல் சூழ்நிலையில் ஒரு மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. எந்தவொரு தனிப்பட்ட கட்சிக்கும் மக்கள் முழு பெரும்பான்மையை வழங்கவில்லை. இத்தகைய இக்கட்டான சூழலில், மக்களால் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டு ஒரு நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதன்மை நோக்கமாகும்."

தவெக ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு என்ற சிபிஎம் கட்சியின் கொள்கை முடிவை எடுத்தது முதல், சமூக வலைதளங்களில் திமுகவினரும், அக்கட்சியின் ஆதரவு அறிவுஜீவிகளும் தங்களை நோக்கி கடுமையான விமர்சனங்களையும், அரசியல் தாக்குதல்களையும் தொடுத்து வருவதாக அவர் சாடியுள்ளார்.

மாநிலத்தில் குதிரை பேரமோ அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சியோ அமைந்துவிடக் கூடாது என்ற உயரிய நோக்கிலும், மக்களின் தீர்ப்பை மதிக்கும் வகையிலுமே இந்த முடிவு எடுக்கப்பட்டதே தவிர, இதில் சுயநல அரசியல் எதுவும் இல்லை என பெ.சண்முகம் தெளிவுபடுத்தியுள்ளார். மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்குத் தங்களின் ஆதரவு தொடர்ந்து நீடிக்கும் என்றும் அவர் தனது பதிவில் சுட்டிக் காட்டியுள்ளார்.