அரசியல் கட்சித் தொடங்கி காணாமல் போன நடிகர்கள் லிஸ்ட் - சினிமா புகழ் ஓட்டுக்களாக மாறாதது ஏன்?

 

தமிழகத்தைப் பொறுத்தவரை சினிமாவுக்கும் அரசியலுக்கும் பிரிக்க முடியாத ஒரு பந்தம் உண்டு. ஆனால், அந்தப் பந்தம் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருக்குக் கொடுத்த வெற்றியை மற்ற நடிகர்களுக்குக் கொடுக்கவில்லை என்பதே யதார்த்தம்.

சிவாஜி கணேசன்: நடிப்பின் சிகரம் என்று போற்றப்படும் சிவாஜி கணேசன், 1988-ல் ‘தமிழக முன்னேற்ற முன்னணி’ என்ற கட்சியைத் தொடங்கினார். ஆனால், அவரால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. இறுதியில் தனது கட்சியைக் கலைத்துவிட்டு ஜனதா தளத்தில் இணைந்தார்.

பாக்யராஜ்: எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு என்று புகழப்பட்ட இயக்குநர் பாக்யராஜ், 1989-ல் ‘எம்.ஜி.ஆர் மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கினார். ஆனால் மக்களிடையே ஆதரவு கிடைக்காததால், விரைவிலேயே அரசியலில் இருந்து ஒதுங்கினார்.

டி.ராஜேந்தர்: ‘லட்சிய திமுக’ என்ற கட்சியைத் தொடங்கிப் பல தேர்தல்களில் போட்டியிட்டார். ஆனால், இன்று அவரது கட்சி பெயரளவிற்கே இருந்து வருகிறது.

விஜயகாந்த்: 2005-ல் தேமுதிக-வைத் தொடங்கிய கேப்டன் விஜயகாந்த், 2011-ல் எதிர்க்கட்சித் தலைவர் என்ற நிலையை எட்டினாலும், அடுத்தடுத்த தேர்தல்களில் அவரது கட்சி பெரும் சறுக்கலைச் சந்தித்தது. தற்போது அவரது மறைவிற்குப் பின் கட்சி தனது பழைய பலத்தை மீட்டெடுக்கப் போராடி வருகிறது.

கமல்ஹாசன்: ‘மக்கள் நீதி மய்யம்’ டிவியை எல்லாம் உடைத்து, கட்சியைத் தொடங்கிய கமல்ஹாசன், 2019 மற்றும் 2021 தேர்தல்களில் கணிசமான வாக்குகளைப் பெற்றாலும், ஒரு தொகுதியிலும் வெற்றி பெற முடியவில்லை. தற்போது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து ஒரு சீட் மட்டும் பெற்றுள்ளார்.

சரத்குமார்: 2007-ல் ‘அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி’யைத் தொடங்கினார். சுமார் 17 ஆண்டுகள் கட்சியை நடத்திய அவர், சமீபத்தில் (2024 மார்ச்) தனது கட்சியைப் பாரதிய ஜனதா கட்சியுடன் இணைப்பதாக அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

கார்த்திக்: ‘நாடாளும் மக்கள் கட்சி’ தொடங்கித் தோல்வியைத் தழுவிய இவர், பின்பு ‘அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி’ எனப் பெயர் மாற்றினார். இப்போது அரசியலில் இவரது குரல் எங்குமே கேட்கவில்லை.

தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ள நடிகர் விஜய், இந்தச் சறுக்கல் வரலாற்றை மாற்றுவாரா அல்லது அதே பட்டியலில் இணைவாரா என்பதே தமிழகத்தின் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

இவர்கள் தவிர நடிகர் மயில்சாமி அரசியல் ஆர்வத்தில் சுயோட்சையாக போட்டியிட்டிருந்தார். நடிகர் மன்சூர் அலிகான் ரெண்டு மூன்று முறை தனிக்கட்சி துவங்கி, கலைத்து, வேறு கட்சியில் இணைந்து, மீண்டும் தனித்து என்று ஒவ்வொரு தேர்தலிலும் சளைக்காமல் போட்டியிட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகர் கருணாஸ் தனிக் கட்சித் தொடங்கி நடத்தி வருகிறார்.