தேசியக் கொடியில் பூக்கள் வைத்து ஏற்றுவது ஏன்? நெகிழ வைக்கும் வரலாற்றுப் பின்னணி!
சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழா கொண்டாட்டங்களின் போது, தேசியக் கொடியை மடித்து அதனுள் மலர்களை வைத்து ஏற்றுவது வழக்கம். கொடி மேலே சென்று கம்பீரமாக அவிழும் போது, அதிலிருந்து மலர்கள் தூவப்படுவதைக் கண்டு அனைவரும் கரவொலி எழுப்பி மகிழ்கிறோம். ஆனால், இந்த வழக்கத்திற்குப் பின்னால் இந்திய விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரிய தியாகமும், உணர்ச்சிப்பூர்வமான ஒரு காரணமும் இருந்துள்ளது.
இந்திய சுதந்திரத்திற்காகப் பல ஆயிரக்கணக்கான வீரர்கள் களமிறங்கித் தங்களின் உயிரைத் தியாகம் செய்தனர். அவர்களின் போராட்டத்தின் பின்னணியில், தங்களது கணவன்மார்களைத் தேசப் பணிக்காக அனுப்பி வைத்த எண்ணற்ற தாய்மார்களின் தியாகம் நிறைந்துள்ளது.
கொடி அவிழும் போது அதிலிருந்து பூக்கள் கீழே சிந்துவது, நம் நாட்டிற்குச் சுதந்திரம் கிடைக்கத் தங்கள் கணவர்களைப் பலி கொடுத்து, தலைப்பூவை இழந்த வீரப்பெண்களின் தியாகத்தைக் குறிப்பிடுவதாக அமைகிறது. அந்த நல்ல உள்ளங்கள் தங்களின் குடும்பத்தையும் தனிப்பட்ட வாழ்வையும் கடந்து, தங்களது கணவர்களைச் சுதந்திரப் போராட்டத்திற்கு அனுப்பி வைக்காமல் இருந்திருந்தால், இந்திய தேசம் அந்நியரின் ஆதிக்கத்திலேயே சிக்கித் தவித்திருக்கும்.
எனவே, நாம் அனுபவிக்கும் இந்தச் சுதந்திரக் காற்றுக்குப் பின்னால் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் தியாகம் உள்ளது என்பதை மக்களுக்கு என்றென்றும் நினைவூட்டவே தேசியக் கொடியில் மலர்களை வைத்து உயர்த்தும் இந்தப் பண்பாட்டு வழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது.