விஜய் மீது எதுக்கு வழக்குப்பதிவு? டிஜிபி-க்கு விளக்கம் கேட்டு அர்ச்சனா பட்நாயக் கடிதம் - சமமான பாதுகாப்பு வழங்க உத்தரவு!
கொளத்தூர் தொகுதியில் நேற்று பிரசாரம் செய்த தவெக தலைவர் விஜய் மீது பெரவள்ளூர் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நேரடியாகக் களமிறங்கியுள்ளது.
சென்னை மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டுள்ள அர்ச்சனா பட்நாயக், செய்தியாளர்களிடம் கூறுகையில், "விஜய் பிரசாரத்தின் போது உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்துச் சென்னை மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் விரிவான விளக்கம் கேட்டுள்ளோம். அவரது பிரசாரத்தின் போது ஏற்பட்ட இடையூறுகள் மற்றும் வழக்குப் பதிவுக்கான காரணங்கள் குறித்த விவரங்களும் கோரப்பட்டுள்ளன."
அனைத்துக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் பிரசாரத்தின் போது சமமான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும், யாருக்கும் பாரபட்சம் காட்டக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தவெக நிர்வாகிகள் அளித்த புகாரைத் தொடர்ந்து, தமிழக டிஜிபி-க்கு அர்ச்சனா பட்நாயக் ஒரு முக்கியக் கடிதத்தை எழுதியுள்ளார். அதில்: அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் புதிய கட்சிகளின் வேட்பாளர்கள் என அனைவருக்கும் சமமான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
பிரச்சாரத்திற்கு அனுமதி அளிப்பதிலும், பாதுகாப்பு வழங்குவதிலும் காவல்துறை எவ்விதப் பாரபட்சமும் காட்டக்கூடாது. நேற்று கொளத்தூரில் விஜய் பிரசாரம் செய்தபோது ஆம்புலன்ஸ் பாதை மறிக்கப்பட்டதாகவும், கூடுதல் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறி 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதற்குப் பதிலடியாக, "காவல்துறை வேண்டுமென்றே பாதுகாப்பு வசதிகளைச் செய்து கொடுக்கவில்லை; அனுமதி மறுப்பதில் பாரபட்சம் காட்டுகிறது" எனத் தவெக தரப்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே தற்போது தலைமைத் தேர்தல் அதிகாரி இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார்.