அட்சய திருதியை ஏன் இவ்வளவு ஸ்பெஷல்? மகாபாரதம் முதல் குபேரன் வரை - நீங்கள் அறியாத ஆச்சரியமான பின்னணி!

 

அட்சய திருதியை என்பது வெறும் தங்கம் வாங்கும் நாள் மட்டுமல்ல; அது வெற்றிகளுக்கும், மங்கல நிகழ்வுகளுக்கும் அடித்தளம் அமைக்கும் மிகப்புனிதமான நாள். 'அகா தீஜ்' என்று அழைக்கப்படும் இந்நாளில் சூரியனும், சந்திரனும் உச்ச நிலையில் இருந்து அருள் பாலிப்பதாக ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்நாளில் தொடங்கும் எந்தவொரு காரியமும் அள்ள அள்ளக் குறையாமல் வளரும் என்பது மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

அட்சய திருதியை ஏன் கொண்டாடப்படுகிறது என்பதற்குப் பின்னால் அடுக்கடுக்கான வரலாற்றுச் சம்பவங்கள் உள்ளன.

மகாமுனிவர் வேதவியாசர் சொல்லச் சொல்ல, ஞானக் கடவுளான விநாயகப் பெருமான் மகாபாரதத்தை எழுதத் தொடங்கிய உன்னதமான நாள் இதுவே. மகாவிஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமர் அவதரித்ததும், உணவுக்கடவுள் அன்னை அன்னபூரணி அவதரித்ததும் இதே நன்னாளில்தான்.

கண்ணனின் ஏழை நண்பன் சுதாமா (குசேலர்), ஒரு பிடி அவலோடு கிருஷ்ணரைக் காண வந்தபோது, அவருக்கு ஈடுஇணையற்ற செல்வத்தை கிருஷ்ணர் வாரி வழங்கிய தினம்.

பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்தபோது, அவர்களின் பசிப்பிணி போக்க கிருஷ்ணர் வற்றாத உணவு தரும் 'அட்சய பாத்திரத்தை' வழங்கியதும் இந்நாளில் தான். புனித நதியான கங்கை அன்னை, விண்ணுலகில் இருந்து மண்ணுலகிற்கு இறங்கி வந்த புண்ணிய தினம்.

லட்சுமி தேவியை வழிபட்டு, தேவர்களின் 'பொருளாளர்' (செல்வக் காவலர்) பதவியை குபேரன் பெற்றதும் இதே அட்சய திருதியை தினத்தில்  தான்.

இந்நாளில் மக்கள் கடைபிடிக்கும் முக்கிய சடங்குகளாக அரிசி, உப்பு, நெய், ஆடைகள் மற்றும் காய்கறிகளை ஏழைகளுக்கு வழங்குவது பெரும் புண்ணியத்தைத் தரும். தங்கம் மகாலட்சுமியின் அம்சம் என்பதால், இந்த நாளில் தங்கம் வாங்குவது அதிர்ஷ்டத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது.

கிழக்கு இந்தியாவில் வணிகர்கள் தங்களின் புதிய கணக்குப் புத்தகங்களை (ஹல்கத்தா) இன்று முறைப்படி தொடங்குகின்றனர். விவசாயிகள் தங்களின் நிலத்தில் முதல் உழவுப் பணியை இன்று மேற்கொள்கின்றனர்.

சமண மதத்தினர் தங்களின் முதல் கடவுளான ஆதிநாதரை நினைவுகூரும் வகையில் இந்த நாளைக் கொண்டாடுகின்றனர். ஓராண்டு தவம் முடிப்பவர்கள் கரும்புச்சாறு அருந்தி இன்று தங்கள் விரதத்தை நிறைவு செய்வார்கள்.

மொத்தத்தில் பக்தி, தியானம் மற்றும் மந்திர ஜபங்கள் மூலம் இறைவனை வழிபடவும், புதிய முயற்சிகளைத் தொடங்கவும் அட்சய திருதியை ஒரு பொன்னான வாய்ப்பாகும்.