"ரூ.900 கோடி எதுக்கு?.... வீட்டுக்குப் போய் உங்க அப்பாகிட்ட கேளுங்க” - சட்டப்பேரவையில் உதயநிதி - ஆதவ் அர்ஜுனா மோதல்!

 

தமிழகச் சட்டமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் தேர்தல் பத்திரங்கள் நிதியாதாரம் குறித்த விவாதத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கும் இடையே கடுமையான தனிப்பட்ட விவாதம் ஏற்பட்டது.

சட்டப்பேரவையில் டாஸ்மாக் மற்றும் மதுபானக் கொள்கை தொடர்பான விவாதத்தின் போது, தேர்தல் பத்திரங்கள் பெறப்பட்ட விவகாரம் எழுப்பப்பட்டது. விவாதத்தின் போது பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "லாட்டரி நிறுவனத்திடமிருந்து ₹900 கோடி ரூபாய் தேர்தல் பத்திரங்கள் பெறப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விளக்கமளிக்க முடியுமா?" எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்குக் காட்டமாகப் பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், "அந்த நிதியைக் கொடுத்தது உங்கள் மாமனார் தான்; எனவே அவரிடமே போய்க் கேளுங்கள்" என்று தெரிவித்தார். இதற்கு உடனடியாகப் பதிலடி கொடுத்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "அவர் ஏன் கொடுத்தார் என்பது அவருக்கும் உங்கள் அப்பாவுக்கும் தான் தெரியும். உங்க அப்பா ஏன் வாங்கினாருன்னு அவர் கிட்டதான் கேட்கணும். அவர் இங்கே இல்லை, வீட்டிற்குப் போய் உங்க அப்பாவிடம் கேளுங்கள்" எனக் கூறினார்.

இரு தலைவர்களும் குடும்பத்தினரைக் குறிப்பிட்டுத் தனிப்பட்ட முறையில் காரசாரமாகப் பேசிக்கொண்டதால் சட்டப்பேரவையில் பெரும் கூச்சலும் குழப்பமும் நிலவியது. இதைத் தொடர்ந்து சபாநாயகர் குறுக்கிட்டுத் தலையிட்ட பின்னரே பேரவையில் விவாதம் மீண்டும் கட்டுக்குள் வந்தது.